தமிழ்நாடு அரசின் பொருளாதார ஆய்வறிக்கை 2024-25 வெளியிடப்பட்டது. இதில் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி, தனி நபர் வருமானம் மற்றும் வருவாய், செலவு குறித்த முக்கிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முந்தைய நாளில் நடப்பு நிதியாண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை வெளியிடும். அந்த வகையில் தமிழ்நாடு அரசு தரப்பில் 2025-2026ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை நாளை தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு அரசின் மாநில திட்டக் குழு சார்பில் தயாரிக்கப்பட்ட தமிழ்நாடு பொருளாதார ஆய்வறிக்கை 2024-25-யை (Economic Survey of Tamil Nadu 2024-25) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இன்று வெளியிட்டார். 

அப்போது, தலைமைச் செயலாளர் சண்முகம், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.பொருளாதார ஆய்வு அறிக்கையை தமிழ்நாடு அரசு வெளியிடுவது இதுவே முதல்முறையாகும். 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பொருளாதார ஆய்வறிக்கையில்: தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8% ஆக இருக்கும் என்றும் தனி நபர் வருமானம் ரூ. 2.78 லட்சமாக அதிகரிக்கும். மேலும் தமிழ்நாட்டில் தனி நபர் வருமானம், தேசிய சராசரியைவிட 1.64 மடங்கு அதிகம். 

மாநிலத்தின் மக்கள் தொகையில் 31.8 சதவிகிதம் உள்ள வடக்கு மண்டலம், சிஎஸ்டிபியில் 36.6 சதவிகிதம் என்ற அதிகபட்ச பங்களிப்பை வழங்குகிறது. அதேபோல் ஒரு ரூபாயில் தமிழக அரசின் வருவாய் எவ்வளவு, செலவு எவ்வளவு என்ற விவரமும் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி ஒரு ரூபாயில் கடன்களை திருப்பி செலுத்துவதற்கு 9.1 சதவிகிதமும், வட்டி செலுத்துவதற்கு 14.1 சதவிகிதமும் பயன்படுத்தப்படுகிறது. கொரோனா தொற்றுக்குப் பிறகு தமிழ்நாட்டில் சேவைத்துறை வலுவான மீட்சியைக் கண்டுள்ளது.