ரூ.50 ஆயிரம் லஞ்சம்... ஆடியோவுடன் வசமாக சிக்கிய தாசில்தார் சஸ்பெண்ட்..!
மணல் கடத்தலுக்கு ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தாசில்தார் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவர் பேசிய ஆடியோ, வைரலாக பரவியதால் அவர் சிக்கி கொண்டார்.
மணல் கடத்தலுக்கு ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தாசில்தார் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவர் பேசிய ஆடியோ, வைரலாக பரவியதால் அவர் சிக்கி கொண்டார்.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தாசில்தாராக வேலை பார்த்தவர் அண்ணாதுரை. அப்பகுதியில் நடக்கும் மணல் கொள்ளையில், இவருக்கு தொடர்பு இருப்பதாகவும், லஞ்சம் வாங்கி கொண்டு, மணல் கடத்தலை ஊக்குவிப்பதாகவும் தொடர்ந்து புகார்கள் வந்தன. இந்தவேளையில், கடந்த சில நாட்களுக்கு முன், லாரி உரிமையாளர் ஒருவர், தாசில்தார் அண்ணாதுரையை சந்தித்தார். அப்போது, மணல் கடத்துவது பற்றி யாரை தொடர்பு கொள்வது என அவர், கேட்டுள்ளார். அதற்கு மழுப்பலாக பேசிய தாசில்தார் அண்ணாதுரை, தன்னை செல்போனில் தொடர்பு கொள்ளும்படி கூறியுள்ளார்.
அதன்படி, லாரி உரிமையாளர், தாசில்தாரை தொடர்பு கொண்டார். அப்போது, நீங்கள் யாரையும் கான்டாக்ட் பன்ன வேண்டாம். ஆளுங்களைக் கை மாத்தி விடற வேலை இருக்கக் கூடாது. 50,000 ரூபாய் வந்து குடுத்துடுங்க. உங்க வேலையை நீங்க பாருங்க என கூறியுள்ளார். இந்த ஆடியோ வைரலாக பரவியது.
இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்துக்கு புகார் சென்றது. விசாரணையில், தாசில்தார் அண்ணாதுரை லஞ்சம் வாங்கியது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவரை சஸ்பெண்ட் செய்த கலெக்டர் சிவராசு, தாசில்தார் அண்ணாதுரையை காத்திருப்போர் பட்டியலில் வைக்க உத்தரவிட்டார். திருவெறும்பூர் புதிய தாசில்தாராக ரபீக் கமது நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இதேபோல், மணல் கடத்தல் டிராக்டரை விடுவிக்க ரூ.30,000 லஞ்சம் கேட்டது தொடர்பாக துறையூர் தேர்தல் பிரிவு தாசில்தார் ஆனந்த் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.