திருச்சியை அடுத்த மணப்பாறை அருகே இருக்கும் நடுக்காட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பிரிட்டோ, கலாமேரி தம்பதியின் 2 வயது மகன் சுர்ஜித் நேற்றுமுன்தினம் மாலை 5.40 மணி அளவில் வீட்டின் அருகே இருந்த ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சம்பவம் இந்தியா முழுவதும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. குழந்தையை பத்திரமாக மீட்பதற்காக கடந்த 44 மணிநேரமாக தீயணைப்பு படையினர், மாநில பேரிடர் மீட்பு பணியினர், தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஆகியோர் தீவிரமாக போராடி வருகின்றனர்.

30 அடியில் இருந்த குழந்தை தற்போது 100 அடியில் சிக்கி இருக்கிறது. பல்வேறு கட்ட முயற்சிகள் எடுக்கப்பட்ட நிலையில் அனைத்தும் தோல்வியை சந்தித்ததால் தற்போது ராட்சத இயந்திரங்கள் மூலமாக ஆழ்துளை கிணற்றின் அருகில் துளையிடப்பட்டு அதன் மூலமாக குழந்தையை மீட்க முயற்சிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் குழந்தை சுர்ஜித்தின் வருகைக்காக அவனது பெற்றோர், உறவினர்கள் மட்டுமில்லாது அந்த கிராமத்தைச் சேர்ந்த ஒட்டுமொத்த மக்களும் சுர்ஜித் வீட்டு அருகே திரண்டு இருக்கின்றனர். 

இன்று தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையிலும் சுர்ஜித்தின் கிராமம் சோகத்தில் மூழ்கியிருக்கிறது. இதுகுறித்து அந்த கிராமவாசிகள் கூறும்போது "மிகவும் சுட்டிப்பையனான சுர்ஜித்திற்கு ஏற்பட்ட இந்த சம்பவத்தை எங்களால நினைச்சுக்கூட பார்க்க முடியல. அவன் நல்லபடியா திரும்பி வரணும். அந்த நேரம் தான் எங்களுக்கு தீபாவளி" என்று வேதனையோடு தெரிவித்தனர்.

குழந்தை நலமுடன் மீண்டும் தாயிடம் திரும்ப வேண்டும் என்பதற்காக நாடுமுழுவதும் இருக்கும் பல கோவில்கள், தேவாலயங்கள், பள்ளிவாசல்கள், ஆதரவற்ற குழந்தைகள் இல்லங்கள், முதியோர் இல்லங்கள் போன்றவைகளில் பிரார்த்தனைகள் நடைபெற்று வருகின்றன. குழந்தையை மீட்கும் பணி மிகவும் சவாலானதாக இருந்தாலும் அரசின் அனைத்து துறைகளும் இணைந்து தீவிரமாக முயற்சி செய்து வருகின்றனர்.