சுர்ஜித் தவறி விழுந்த ஆழ்துளை கிணறு இருந்த இடத்தில் கோயில் கட்ட வேண்டும் என்பதே எனது ஆசை என்று சுர்ஜித்தின் தாய் கலாமேரி உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் கடந்த 25ம்  தேதி மாலை ஆழ்துளைக் கிணறுக்குள் விழுந்த சுர்ஜித் என்ற இரண்டு வயது குழந்தை, 82 மணி மீட்புப் போராட்டத்துக்கு பிறகு அழுகிய நிலையில் சடலமாக எடுக்கப்பட்டான். குழந்தையின் உடல் அழுகிவிட்டதால், மீட்பு பணிகளை நிறுத்திவிட்டு, குழந்தையின் சில உடல் பாகங்களை மட்டும் கொண்டு வந்து, பிரேத பரிசோதனை நடத்தி, நல்லடக்கமும் செய்யப்பட்டுவிட்டது. இந்நிலையில் குழந்தை சுர்ஜித்தின் தாய் கலாமேரி தனது மகனுக்காகப் பிரார்தித்தவர்களுக்கு உருக்கமாக நன்றி  தெரிவித்துள்ளார்.


 “ஆழ்துளை கிணறில் விழுந்த எனது மகனின் மரணமே இறுதியாக இருக்க வேண்டும். இதுபோன்ற உயிரிழப்பு சம்பவம் இனியும் தொடர கூடாது. சுர்ஜித் தவறி விழுந்த ஆழ்துளை கிணறு இருந்த இடத்தில் கோயில் கட்ட வேண்டும் என்பதே எனது ஆசை. முதல்வர்கள் எங்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார். தங்களால் இயன்ற அளவுக்கு சுர்ஜித்தை மீட்க எல்லாவிதமான முயற்சிகளையும் மேற்கொண்டதாக முதல்வர் ஆறுதல் தெரிவித்தார். மீட்பு பணிக்கு உதவிய அனைவருக்கும் மிக்க நன்றி. எனது மகன் உயிர்ப் பிழைக்க வேண்டும் என்பதற்காக பிரார்த்தனை செய்த அனைவருக்குமே மனமார்ந்த நன்றி” என கலாமேரி தெரிவித்துள்ளார்.