32 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் ஜெஸீகா செய்ததை, இந்தியாவில் நிகழ்த்துவானா..? ஆழ்துளை கிணறுகளை அழிக்கப்பிறப்பெடுத்த சுர்ஜித்..!
ஆழ்துளை கிணறுகளில் குழந்தைகள் விழும்போது மட்டும் தான் இங்கே விழிப்புணர்வுகள் வந்து எட்டிப்பார்க்கின்றன. அதன் பிறகு அந்த விழிப்புணர்வுகள் ஆழ்துளை கிணறுகளின் அடியில் போய் ஒழிந்து கொள்கின்றன.
ஆனால், அமெரிக்காவில் 32 ஆண்டுகளுக்கு முன்பே குழந்தை ஜெஸிகா ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த மீட்கப்பட்ட பிறகு அங்கு இதுவரை ஒரு சம்பவம் கூட நிகழவில்லை. கடந்த 1987-ம் ஆண்டு 22 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை ஜெசிகாவை 58 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்ட அமெரிக்கர்கள், பயன்படாத ஆழ்துளை கிணறுகள் அனைத்தையும் இரும்பு மூடி போட்டு மூடி விட்டார்கள்.
டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள தனது பாட்டி வீட்டின் பின்புறம் ஜெசிகா என்ற 18 மாத குழந்தை விளையாடி கொண்டு இருந்தது. அப்போது குழந்தையின் தாய் ரீபா செஸ்சியும் உடன் இருந்தார். டெலிபோன் அழைப்பு வரவே அவர் வீட்டிற்குள் சென்றார். டெலிபோனில் பேசி விட்டு, வெளியே வந்து பார்த்த போது ஜெசிகா மாயமாகி இருந்தாள். இதனால் பதட்டம் அடைந்த ரீபா செஸ்சி, ஜெசிகாவை தேடி பார்த்தார். அப்போது அங்கு திறந்து இருந்த ஆழ்துளை கிணற்றில் இருந்து ஜெசிகாவின் அழுகை சத்தம் கேட்டது. இதனால் பதட்டம் அடைந்த அவர், குழந்தையை மீட்க போலீசாருக்கு உடனே தகவல் கொடுத்தார். அதன் பின் சில மணித்துளிகளில் அந்த குழந்தையை மீட்க அமெரிக்க அரசு ஒட்டுமொத்த அரசு துறைகளையும் களம் இறக்கியது.
ஜெசிகா விழுந்த ஆழ்துளை கிணறு 22 அடி ஆழமும், 8 அங்குலம் அகலமும் கொண்டது. வெறும் 22 அடி தான் என்றாலும், குழந்தையை மீட்க அவர்கள் எடுத்த பல்வேறு நடவடிக்கைகள் தோல்வியில் தான் முடிவடைந்தன. நேரம் செல்ல, செல்ல பதற்றம் அதிகரித்தது. அதன்பின் ஜெசிகாவை பத்திரமாக மீட்க, அருகில் புதிய ஆழ்துளை கிணறு அமைத்து அதன் வழியே மீட்பு குழுவினரை அனுப்பி மீட்க திட்டமிடப்பட்டது. ஆனால் அங்கு பாறை அதிக அளவில் இருந்ததால் தோண்டும் பணி பெரும் சவாலாக இருந்தது. 22 அடியை தோண்டுவதற்கு மட்டும் சுமார் 45 மணி நேரம் ஆனது. அதன்பின் ஜெசிகாவை மீட்பதற்கு மீட்பு படையினர் ஆழ்துளை கிணற்றுக்குள் சென்றனர். அங்கு படுகாயங்களுடன் மயக்க நிலையில் இருந்த ஜெசிகாவை அவர்கள் பத்திரமாக மீட்டனர். ஒட்டுமொத்தமாக இந்த மீட்பு பணி 58 மணி நேரம் நடந்தது.
மீட்புக்கு பின், ஜெசிகா பல மாதங்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாள். அவருக்கு 15 அறுவை சிகிச்சைகள் செய்து டாக்டர்கள் காப்பாற்றினர். அறக்கட்டளை ஒன்று, நிதி வசூலும் செய்தது. ஒட்டுமொத்த அமெரிக்கர்களின் மனதிலும் இடம் பிடித்த ஜெசிகா, அமெரிக்காவின் குழந்தை என்று அழைக்கப்பட்டாள்.
ஜெசிகாவின் மீட்பு பணியினை அப்போது சி.என்.என். டி.வி. நேரடி ஒளிபரப்பு செய்தது. இந்த நிகழ்வு தான் இன்றளவும் அமெரிக்காவில் அதிக நேரம் நேரலை செய்யப்பட்ட நிகழ்ச்சி ஆகும். ஜெசிகா மீட்கப்பட்டபோது எடுத்த புகைப்படத்திற்கு 1988-ம் ஆண்டு மிகவும் உயரிய விருதான புலிட்சர் விருது வழங்கப்பட்டது.
1989-ம் ஆண்டு அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற ஜார்ஜ் எச்.டபிள்யு புஷ், ஜெசிகாவை வெள்ளை மாளிகைக்கு அழைத்து விருது வழங்கி பாராட்டினார். தற்போது ஜெசிகாவிற்கு 33 வயது ஆகிறது. ஒரு தொடக்க பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். அவருக்கு திருமணம் ஆகி ஒரு ஆண், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். ஜெசிகாவின் 25-வயதின்போது, அவருக்கு ஏற்கனவே அறக்கட்டளை வசூலித்த சுமார் ரூ.9 கோடி நிதி வழங்கப்பட்டது. ஆழ்துளை கிணறு இரும்பு மூடி போட்டு மூடப்பட்டது
அமெரிக்காவின் இந்த ஒரு சம்பவம் தான், அதற்கு பின் அங்கு ஆழ்துளை கிணற்றில் எந்த குழந்தையும் இதுவரை விழவில்லை. அமெரிக்கர்கள் ஆழ்துளை கிணற்றை திறந்து வைத்தால் அதில் குழந்தைகள் விழுந்து விடும் என்று பாடம் கற்றுக்கொண்டார்கள். எனவே பயன்படாத ஆழ்துளை கிணறுகள் அனைத்தையும் இரும்பு மூடி போட்டு மூடி விட்டார்கள். அதாவது நல்ல மாட்டுக்கு ஒரு சூடு என்பது போல.
இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் 70-க்கும் மேற்பட்ட குழந்தைகள் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சம்பவங்கள் அரங்கேறி உள்ளது. தமிழகத்தில் மட்டும் 12 சம்பவங்கள் நிகழ்ந்து இருக்கிறது. ஒவ்வொரு முறையும் இது போன்ற சம்பவங்கள் நடக்கும் போது அதுபற்றி அதிக அளவில் பேசுகிறோம். ஆனால் சிறிது நாட்களில் அதனை மறந்து விடுகிறோம்.