திருச்சி பொன்மலையைச் சேர்ந்தவர் ராக்கி எமர்சன். இவரது மகள் ஏஞ்சலின் லேமோ. இவர் திருச்சி மேலப்புதூரில் இருக்கும் ஒரு தனியார் கான்வென்ட் பள்ளியில் 11 ம் வகுப்பு படித்து வருகிறார்.

காலாண்டு தேர்வுகள் முடிந்து பள்ளி திறக்கப்பட நிலையில், தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில் ஏஞ்சலின் குறைவான மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார். இதனிடையே இந்த பள்ளியில் பெற்றோர்- ஆசிரியர் கூட்டம் நடந்திருக்கிறது. கூட்டத்தில் ஏஞ்சலினின் தந்தை ராக்கி எமர்சனும் கலந்து கொண்டுள்ளார். அப்போது அவரிடம் தலைமை ஆசிரியை காலாண்டு தேர்வில் ஏஞ்சலின் மதிப்பெண்கள் குறைவாக எடுத்ததை பற்றி கேள்வி எழுப்பினர். வீட்டில் ஒழுங்காக படிக்கிறாரா இல்லையா? என்றும் கேட்டுள்ளனர்.

தொடர்ந்து ஏஞ்சலினை தந்தை முன்னிலையில் அவர்கள் திட்டியதாக தெரிகிறது. இதனால் மனவருத்தம் அடைந்த ஏஞ்சலின் அழுதிருக்கிறார். அவரை ராக்கி எமர்சன் தேற்றிக்கொண்டிருக்கும் போது திடீரென ஓடிச் சென்று மாடியில் இருந்து குதித்துள்ளார். இதைப்பார்த்து அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர். 

30 அடி உயரம் இருக்கும் இரண்டாவது மாடியில் இருந்து குதித்ததால், ஏஞ்சலின் பலத்த காயமடைந்து ரத்தவெள்ளத்தில் கிடந்தார். உடனடியாக அவரை சிகிச்சைக்காக திருச்சியில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு ஏஞ்சலினிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவம் நடந்த பள்ளிக்கு வந்த காவலர்கள், தலைமை ஆசிரியை, ஆசிரியைகள் பெற்றோர்களிடமும் சம்பவத்தை நேரில் பார்த்த மாணவிகளிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பள்ளி வளாகத்திலேயே மாணவி ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.