போதும் நிறுத்துங்க... அது சுர்ஜித்தே அல்ல..!
டிக்டோக் வீடியோக்களில் சிறுவன் சுர்ஜித் ஆடுவதாக சமூக வலைதளவைரலாகும் வீடியோவில் இருப்பது சுஜித் அல்ல எனத் தெரியவந்துள்ளது.
திருச்சி மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுர்ஜித்தை மீட்கும் பணி 80 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்றது. ஆனால் மீட்பு பணிகள் இறுதியில் தோல்வியில் முடிந்துவிட்டன. சுஜித்தின் உடலுக்கு மருத்துவமனையில் உடனடியாக பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
பின்னர் சுஜித்தின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, சடங்குகள் செய்யப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. சுஜித்தின் மறைவுக்கு அப்பகுதி மக்கள் மட்டுமின்றி இந்திய மக்களும் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். சுஜித்தின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ட்விட்டரில் ஹேஸ்டேக்குகள் ட்ரெண்டிங்கில் உள்ளன.
பலரும் சுஜித்தின் புகைப்படங்களை பகிர்ந்து அவனின் இறப்புக்காக அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதேவேளையில் சுஜித் என்று கூறப்பட்டு வேறு ஒரு சிறுவனின் புகைப்படமும், வீடியோவும் அதிகளவில் பகிரப்படுகின்றன. நடனம் ஆடும் யாரோ ஒரு சிறுவனின் வீடியோ சுர்ஜித் என சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. உண்மை தன்மை அறியாமல் பலரும் அந்த வீடியோவையும், புகைப்படத்தையும் சோகமாக பதிவிட்டும், பகிர்ந்து வருகின்றனர்.