இரண்டாவது இயந்திரமும் பழுதானது..! மீட்புப்பணிகளில் தொடரும் சோதனை..!
பள்ளம் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டாவது இயந்திரமும் தற்போது பழுதாகி இருப்பதாக தகவல் வந்திருக்கிறது. இயந்திரத்தில் இருக்கும் போல்ட்டுகள் சேதம் அடைந்திருப்பதால் மீட்புப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. இருப்பினும் மாற்று பாகங்கள் தயார் நிலையில் இருப்பதால் மீண்டும் மீட்பு பணிகள் தொடங்கி நடக்கும் என்று தெரிகிறது.
திருச்சி அருகே இருக்கும் நடுக்காட்டுபட்டியைச் சேர்ந்த குழந்தை சுஜித் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சம்பவம் நாடுமுழுவதும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. 66 மணிநேரத்திற்கும் மேலாக ஆழ்துளை கிணற்றில் சிக்கியிருக்கும் குழந்தையை மீட்க தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பல முயற்சிகளும் தோல்வி அடைந்த நிலையில் ராட்சத இயந்திரங்கள் மூலம் குழி தோண்டும் பணி நடைபெற்று வந்தது. ஆழ்துளை கிணறு அமைந்திருக்கும் பகுதி கடினமான பாறைகளை கொண்டிருப்பதால் மீட்பு பணிகளில் சிரமம் ஏற்பட்டது.
பள்ளம் தோண்டும் பணியில் ஈடுபடுத்தப்பட்ட இயந்திரத்தின் பிளேடுகள் பாறைகளால் சேதமடைந்தது. இதையடுத்து மூன்று மடங்கு அதிக திறன் கொண்ட இரண்டாவது இயந்திரம் ராமநாதபுரத்திலிருந்து கொண்டுவரப்பட்டது. அதன் மூலம் பள்ளம் தோண்டும் பணி மீண்டும் தொடங்கி நடைபெற்று வந்தது. இதுவரையிலும் 45 அடி வரையிலும் பள்ளம் தோண்டப்பட்டு இருக்கிறது.
இந்த நிலையில் பள்ளம் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டாவது இயந்திரமும் தற்போது பழுதாகி இருப்பதாக தகவல் வந்திருக்கிறது. இயந்திரத்தில் இருக்கும் போல்ட்டுகள் சேதம் அடைந்திருப்பதால் மீட்புப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. இருப்பினும் மாற்று பாகங்கள் தயார் நிலையில் இருப்பதால் மீண்டும் மீட்பு பணிகள் தொடங்கி நடக்கும் என்று தெரிகிறது.
87 அடியில் குழந்தை சிக்கியிருக்கும் நிலையில் தற்போது வரை 45 அடி தான் தோண்டப்பட்டு இருக்கிறது. இதனால் மீட்பு பணிகள் மேலும் அதிக நேரம் எடுக்கும் என்று தெரிகிறது.