திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே இருக்கிறது வேம்பூர். இங்கு ஒரு தனியார் பள்ளி பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. சுற்று வட்டார பகுதிகளில் இருந்து 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் இந்த பள்ளியில் பயின்று வருகின்றனர். பள்ளிக்கு சொந்தமான பேருந்து ஒன்றில் மாணவர்கள் தினமும் வந்து சென்றுள்ளனர்.

இன்று காலையிலும் பள்ளி வாகனம் ஒன்று மாணவர்களை ஏற்றிக்கொண்டு வந்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் மேகளத்தூரில் இருந்து மாரனேரி, இந்தலூர், கிளியூர், பத்தாளப்பட்டை வழியாக மாணவ மாணவிகளை ஏற்றிக்கொண்டு பேருந்து பள்ளியை நோக்கி வந்து கொண்டிருந்தது. திருவெறும்பூர் அருகே இருக்கும் செட்டியார்பேட்டை அருகே வந்தபோது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து அருகே இருந்த வாய்க்காலில் தலைகுப்புற கவிழ்ந்தது.

இந்த விபத்தில் பேருந்துக்குள் இருந்த 10ம் வகுப்பு மாணவர்கள் 6 படுகாயமடைந்தனர். விபத்தை பார்த்து அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சியடைந்து பேருந்துக்குள் சிக்கியிருந்த மாணவர்களை மீட்டனர். காயமடைந்தவர்கள் அனைவரும் திருச்சியில் இருக்கும் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தகவலறிந்த திருவெறும்பூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.