திருச்சி அருகே இருக்கும் மணப்பாறையில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தை சுர்ஜித்தை மீட்கும் பணிகள் 65 மணிநேரத்திற்கும் மேலாக தொடர்ந்து நடந்து வருகிறது. பல்வேறு கட்ட முயற்சிகள் எடுக்கப்பட்டு அனைத்தும் தோல்வியில் முடிந்த நிலையில் ராட்சத இயந்திரங்கள் மூலம் பள்ளம் தோண்டப்பட்டு பக்கவாட்டில் குழி ஏற்படுத்தி குழந்தையை மீட்க முடிவு செய்யப்பட்டிருந்தது. இதற்காக இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு குழி தோண்டும் பணி நடைபெற்று வந்தது.

ஆழ்துளை கிணறு அமைந்திருக்கும் பகுதி கடினமான பாறைகளால் சூழ்ந்திருப்பதால் ரிக் இயந்திரத்தின் பிளேடுகள் அடுத்தடுத்து சேதமடைந்தன. இதனால் போர்வெல் மூலம் குழி தோண்ட முடிவெடுக்கப்பட்டது. தீயணைப்பு வீரர் ஒருவர் கயிறு கட்டி குழிக்குள் இறக்கி அங்கு இருக்கும் தன்மையை ஆராய்ந்து வந்தார்.இதையடுத்து  போர்வெல் இயந்திரம் மூலம் பாறையை துளையிடும் பணி தொடங்கியது.ரிக் இயந்திரத்தை அகற்றிவிட்டு போர்வெல் இயந்திரம் மூலமாக தற்போது துளையிடப்பட்டு வருகிறது.

இதனிடையே குழந்தை சுர்ஜித்திற்காக தமிழகம் முழுவதும் பிராத்தனைகள் நடைபெற்று வருகின்றன. கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள் போன்ற இடங்களில் சுர்ஜித் மீண்டுவர வழிபாடுகள் நடக்கின்றன. அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் சுர்ஜித்தின் வருகைக்காக பிரார்த்தித்து வருகின்றனர்.

இந்தநிலையில் சமத்துவ மக்கள் கட்சித் தலைவரும் நடிகருமான சரத்குமார் அனைவரும் பிராத்தனை செய்யுமாறு வேண்டுகோள் விடுத்திருக்கிறார். பலமணி நேரம் கடந்து விட்டாலும் சுர்ஜித் மீண்டும் அவனது தாயிடம் நலமுடன் வந்துசேர இறைவனை வேண்டுவோம் என்று கூறியிருக்கிறார். மேலும் நாம் பிராத்தனை செய்யும்போது அதிசயங்கள் நிகழும் என்றும் தான் வெளியிட்டிருக்கும் காணொளியில் சரத்குமார் தெரிவித்துள்ளார்.