திருட சென்ற வீட்டில், சமைத்து வைத்திருந்த உணவை கொள்ளையர்கள் ருசி பார்த்த சம்பவம் திருச்சியில் நடந்துள்ளது.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே இருக்கிறது மாந்துறை கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் பிரான்சிஸ். வீடுகள் கட்டி விற்பனை செய்யும் தொழில் பார்த்து வருகிறார். இவரது குடியிருப்பு பகுதியில் நேற்று முந்தினம் இரவு கொள்ளையர்கள் புகுந்து அடுத்தடுத்து இருந்த 3 வீடுகளில் திருட்டில் ஈடுபட்டனர்.

முதலில் ராஜா என்பவர் வீட்டில் ஜன்னல் வழியாக ஒட்டடை அடிக்க பயன்படும் குச்சியை விட்டு டேபிளில் இருந்த 2500 ரூபாயை திருடினர். இதற்கு அடுத்ததாக இருந்த சீனிவாசன் என்பவர் வீட்டில் ஆள் இல்லாததை அந்த மர்ம நபர்கள் நோட்டமிட்டு இருக்கிறார்கள். சீனிவாசன் வீட்டின் பூட்டை உடைத்த அவர்கள் உள்ளே புகுந்து லேப்டாப் மற்றும் 1500 ரூபாயை கொள்ளையடித்தனர்.

அதைத்தொடர்ந்து வரதராஜன் என்பவரின் வீட்டில் இருந்த செல்போனை கொள்ளையர்கள் ஜன்னல் வழியாக திருடினர். பின்னர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவராக இருந்த யோகமலர் என்பவரின் வீட்டில் கொள்ளையடிக்க திட்டமிட்டனர். அந்த வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள், அங்கே உணவு சமைத்து வைக்கப்பட்டிருப்பதை கண்டுள்ளனர். அதைப்பார்த்ததும் அவர்களுக்கு பசி எடுத்துள்ளது. உடனே உணவுகளை ருசிபார்த்து வயிறார சாப்பிட்டு விட்டு தப்பி ஓடினர்.

3 வீடுகளை சேர்ந்தவர்களும் காலை எழுந்த போது வீட்டில் திருட்டு நடந்திருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் மூன்று பேர் சார்பாக லால்குடி காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.