கொரோனா தடுப்பு பணிக்காக சென்ற வருவாய் ஆய்வாளர்..! விபத்தில் பரிதாப பலி..!
அரசு பணியாளர்கள் அனைவரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். வருவாய் ஆய்வாளரான சேகருக்கும் அதற்கான பணி ஒதுக்கப்பட்டிருந்தது. ஆய்விற்காக நாமக்கல்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தனது இருசக்கர வாகனத்தில் சேகர் சென்று கொண்டு இருந்தார்.
திருச்சி மாவட்டம் முசிறியைச் சேர்ந்தவர் சேகர். அங்கிருக்கும் தொட்டியம் பகுதியில் வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வந்தார். தற்போது கொரோனா வைரஸ் நோய் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. அரசு பணியாளர்கள் அனைவரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். வருவாய் ஆய்வாளரான சேகருக்கும் அதற்கான பணி ஒதுக்கப்பட்டிருந்தது. இதற்காக நாமக்கல்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தனது இருசக்கர வாகனத்தில் சேகர் சென்று கொண்டு இருந்தார்.
அப்போது அங்கு அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று அதிவேகத்தில் சேகரின் இருசக்கர வாகனம் மீது மோதி இருக்கிறது. இதில் தூக்கி வீசப்பட்ட சேகர் தலையில் பலத்த காயமடைந்து உயிருக்குப் போராடினார். சேகர் மீது மோதியதும் அந்த வாகனம் உடனடியாக அங்கிருந்து தப்பிச் சென்றிருக்கிறது. விபத்தில் வருவாய் ஆய்வாளர் படுகாயங்களுடன் கிடப்பது கண்டு அதிர்ச்சியுற்ற அப்பகுதி மக்கள் உடனடியாக அவரை மீட்டு தொட்டியம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்ட பிறகு மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின் திருச்சி அரசு மருத்துவமனையில் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்த சேகர் மூளைச்சாவு அடைந்த நிலையில் இன்று அதிகாலையில் மரணமடைந்தார்.
தகவல் அறிந்ததும் மாவட்ட ஆட்சியர் சிவராசு நேரில் சென்று சேகரின் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி சேகரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்திருக்கும் காவலர்கள் அடையாளம் தெரியாத வாகனத்தை தீவிரமாக தேடி வருகின்றனர். கொரோனா பணியில் ஈடுபட்டிருந்த வருவாய் ஆய்வாளர் விபத்தில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.