ராமஜெயம் கொலை குற்றவாளிகள் தென் மாவட்டத்தை சேர்ந்தவர்களா? குற்றவாளிகளை பிடிக்க போலீஸ் எடுத்த அதிரடி முடிவு.!
அமைச்சர் நேருவின் சகோதரர் கடந்த 2012ம் ஆண்டு மார்ச் 29ம் தேதி தனது வீட்டில் இருந்து நடைபயிற்சி சென்றவர் வீடு திரும்பவில்லை, இதனையடுத்து மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட நிலையில், காவிரி ஆற்றின் கரையில் இருந்து அவரது சடலம் கண்டு எடுக்கப்பட்டது.
ராமஜெயம் கொலை குற்றவாளிகள் பற்றி தகவல் கொடுத்தால் ரூ.50 லட்சம் பரிசு வழங்கப்படும் என போலீஸ் சுவரொட்டியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ராமஜெயம் கொலை வழக்கு
அமைச்சர் நேருவின் சகோதரர் கடந்த 2012ம் ஆண்டு மார்ச் 29ம் தேதி தனது வீட்டில் இருந்து நடைபயிற்சி சென்றவர் வீடு திரும்பவில்லை, இதனையடுத்து மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட நிலையில், காவிரி ஆற்றின் கரையில் இருந்து அவரது சடலம் கண்டு எடுக்கப்பட்டது. இதுகுறித்து, தில்லை நகர் போலீசார் முதலில் வழக்குப் பதிவு செய்தனர். பின்னர், சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. கொடூரமான முறையில் ராமஜெயம் கொலை செய்யப்பட்டிருந்தார். இவரது கொலை வழக்கு தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை
கொலை வழக்கை விசாரித்த சிபிசிஐடி போலீசார் பல ஆண்டுகளாகியும் கொலையாளியின் நிழலைக்கூட நெருங்க முடியவில்லை. இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றும் ராமஜெயத்தின் மனைவி லதா கோரிக்கை விடுத்தார். இதனையடுத்து, இந்த வழக்கு சிபிஐ வசம் சென்றது. ஆனால், சிபிஐ விசாரணையிலும் எந்த ஒரு முன்னேற்றமும் ஏற்படாததால், வழக்கை மாநில காவல்துறையே விசாரிக்க வேண்டும் என ராமஜெயத்தின் சகோதரர் என். ரவிச்சந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி வி. பாரதிதாசன், சிபிசிஐடி, சிபிஐ அமைப்புகள் 10 ஆண்டுகள் விசாரணை நடத்தியும் கொலைக்கான நோக்கம் கண்டறியப்படவில்லை எனக்கூறி, வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து உத்தரவிட்டார். தூத்துக்குடி எஸ்.பி.-யாக இருந்த ஜெயக்குமார் தலைமையில், அரியலூர் டி.எஸ்.பி. மதன், சென்னை சிபிஐ-யை சேர்ந்த ரவி ஆகியோர் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவை நியமித்து உத்தரவிட்டனர். மேலும், விசாரணையை சிபிசிஐடி டிஜிபி ஷகீல் அக்தர் கண்காணிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். விசாரணைக்கு தேவையான உதவிகளை அரசு செய்ய வேண்டும் எனவும் கூறியிருந்தார்.
துப்பு கொடுத்த 50 லட்சம் ரூபாய்
இந்த தொடர்பான வழக்கு விசாரித்த போதிலும் குற்றவாளிகள் தொடர்பாக துப்பு எதுவும் கிடைக்கவில்லை. இதனையடுத்து, கொலையாளிகள் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு 50 லட்சம் ரூபாய் ரொக்க பரிசு அறிவிக்க உள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தனர். இதற்கிடையே ராமஜெயம் கொலை வழக்கில் ஈடுபட்ட கும்பலில் ஒரு சிலர் சிவகங்கை உள்ளிட்ட தென் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது. எனவே இங்கு வசிக்கும் ஒரு சிலருக்கு குற்றவாளிகள் பற்றிய விவரம் தெரிந்து இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். எனவே சி.பி.சி.ஐ.டி போலீசார் சிவகங்கை, மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அதிரடியாக போஸ்டர்கள் ஒட்டி வருகின்றனர். அதில் திருச்சி ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக துப்பு கொடுத்தால், ரூ 50 லட்சம் வெகுமதி தரப்படும் என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது.