48 மணி நேரத்திற்கு கொட்டித்தீர்க்க போகும் மழை..! கடலோர மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!
நாளையும் நாளை மறுநாளும் தமிழக கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வந்தது. இதனால் மாநிலத்தில் இருக்கும் அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்து நீர்மட்டம் வேகமாக உயரத்தொடங்கியது. பல அணைகள் நிரம்பி ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. சென்னையிலும் பலத்த மழை பெய்ததால் ஏரிகள் நிரம்பத் தொடங்கின. சென்னையின் நிலத்தடி நீர்மட்டம் அளவும் உயர்ந்துள்ளதாக அரசு தெரிவித்தது.
இந்த நிலையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்திருக்கிறது. குமரி கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக நாளையும் நாளை மறுநாளும் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய கூடும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இன்று மழைக்கான வாய்ப்பு குறைவு எனவும் கூறப்பட்டுள்ளது.
12 மற்றும் 13 ஆகிய இரண்டு நாட்களிலும் தமிழகத்தின் உள்மாவட்டங்களின் சில இடங்களிலும் லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில இடங்களில் மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. வடகிழக்கு பருவமழை இயல்பை விட 7 சதவீதம் அதிகம் பெய்திருப்பதாக வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.