3 நாளைக்கு மிரட்ட வருகிறது மழை..! உஷார் மக்களே..!
வெப்பச்சலனம் காரணமாக 22ம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுவையில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து பல மாவட்டங்களிலும் கனமழை கொட்டித்தீர்த்தது. இதன்காரணமாக அணைகளின் நீர்மட்டம் வேகமாக அதிகரித்து முக்கிய அணைகள் பல நிரம்பி வழிந்தது. ஆறுகளிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. சென்னையில் பெய்த மழையால் நிலத்தடி நீர்மட்டம் ஓரளவிற்கு உயர்ந்துள்ளது.
இடையில் ஓய்ந்திருந்த மழை அவ்வப்போது வெளுத்து வாங்கியது. வடகிழக்கு பருவமழை தற்போது நிறைவடையும் தருவாயில் இருக்கும் நிலையில் அடுத்த சில தினங்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. வெப்பச்சலனம் காரணமாக ஞாயிற்று கிழமை வரை தமிழகம் மற்றும் புதுவையில் மிதமான மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 20 மற்றும் 21 ஆகிய தினங்களில் சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் வானிலை மையம் கூறியிருக்கிறது.
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில இடங்களில் மழை பெய்ய கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.