11 மாவட்டங்களில் மிரட்ட போகுது மழை..! வானிலை மையம் அறிவிப்பு..!
அடுத்த 24 மணிநேரத்திற்கு தமிழகத்தின் சில மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்கியதையடுத்து மாநிலத்தின் பல மாவட்டங்களிலும் மழை கொட்டித் தீர்த்தது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் உயர்ந்தது. முக்கிய அணைகள் பல நிரம்பி ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இந்தநிலையில் வடகிழக்கு பருவமழை நிறைவடையும் தருவாயில் தற்போது தமிழகத்தின் சில இடங்களில் மீண்டும் மழை வெளுத்து வாங்கி வருகிறது.
கடந்த 1 வாரமாக சென்னை,வேலூர்,காஞ்சிபுரம் உட்பட சில மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை நீடிக்க வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. வளிமண்டலத்தில் நிலவும் காற்று வேக மாறுபாடு காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய கூடும்.
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று அதிகாலையில் சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. அதே போல நாகை மாவட்டத்தின் வேளாங்கண்ணி,திட்டச்சேரி ஆகிய இடங்களிலும் கனமழை பெய்தது.