பொங்கல் பண்டிகையின் போது 3 நாட்களில் மட்டும் ரூ.606 கோடியே 72 லட்சத்துக்கு மது விற்பனை ஆகியுள்ளது. இதிர், திருச்சி மண்டலத்தில் மட்டும் ரூ.143 கோடிக்கு மது விற்பனையாகி முதலிடத்தை பிடித்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 10 சதவீதத்துக்கு அதிகமாக விற்பனை நடந்துள்ளது.

தமிழகத்தில் சாதாரண நாட்களில் ரூ.80 கோடி முதல் ரூ.90 கோடி வரையில் மதுவிற்பனை நடைபெறும். அதேநேரத்தில் தீபாவளி, புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகை காலங்களில் டாஸ்மாக் கடைகளில் வழக்கத்தை விட மது விற்பனை அதிகமாக இருக்கும். அந்த வகையில் புத்தாண்டு பண்டிகையையொட்டி டாஸ்மாக் கடைகளில் ரூ.315 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டு இருந்தது.

இந்நிலையில், பொங்கல் பண்டிகை கடந்த 14-ம் தேதி முதல் களை கட்ட தொடங்கியது. இதனால் டாஸ்மாக் கடைகளில் மது விற்பனையும் கல்லா கட்டி இருக்கிறது. கடந்த 14-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை டாஸ்மாக் கடைகளில் ரூ.606 கோடிக்கு மது விற்பனை ஆகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இடையில், 16-ம் தேதி திருவள்ளூர் தினத்தையொட்டி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

கடந்த 14-ம் தேதி போகி பண்டிகை அன்று ரூ.178 கோடியே 44 லட்சம், 15-ம் தேதி பொங்கல் பண்டிகையில் ரூ.253 கோடியே 39 லட்சம், 17-ம் தேதி காணும் பொங்கலுக்கு ரூ.174 கோடியே 89 லட்சம் என மொத்தம் ரூ.606 கோடியே 72 லட்சத்துக்கு பொங்கல் பண்டிகையையொட்டி டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை ஆகி இருக்கிறது. இது கடந்த ஆண்டை விட 10 சதவீதத்துக்கு அதிகமாக விற்பனை ஆகி இருப்பது குறிப்பிடத்தக்கது. திருச்சி மண்டலத்தில் மட்டும் ரூ.143 கோடிக்கு மது விற்பனையானதால் இந்த மண்டலம் மது விற்பனையில் முதலிடத்தில் உள்ளது.