முட்டி மோதிய ஜல்லிக்கட்டு காளை..! மாடு உரிமையாளர் குடல் சரிந்து பலி..!
பழனியாண்டியின் காளை வெளிவரும் நேரம் வந்ததும் வீரர்களிடம் சிக்காமல் வரும் காளையை பிடிப்பதற்காக கயிறுடன் திடலில் இருந்து சற்று தொலைவில் நின்று கொண்டிருந்தார். அப்போது வாடிவாசலில் இருந்து வெளிவந்த மற்றொரு காளை சீறி பாய்ந்து பழனியாண்டி மீது மோதியது.
புதுக்கோட்டை மாவட்டம் ராஜகிரி அருகே இருக்கிறது சுக்காம்பட்டி கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் பழனியாண்டி. சொந்தமாக காளை மாடு வளர்த்து வருகிறார். திருச்சி சுற்றுவட்டார பகுதியில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் காளை மாட்டை தவறாமல் கலந்து கொள்ள செய்வார். இதற்காக காளை மாட்டிற்கு பயிற்சியும் அளித்து உள்ளார்.
இந்தநிலையில் திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருகே இருக்கும் ஆவரங்காட்டில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில் பழனியாண்டி தனது காளை மாட்டினை பங்கு பெற அழைத்து வந்திருந்தார். பழனியாண்டியின் காளை வெளிவரும் நேரம் வந்ததும் வீரர்களிடம் சிக்காமல் வரும் காளையை பிடிப்பதற்காக கயிறுடன் திடலில் இருந்து சற்று தொலைவில் நின்று கொண்டிருந்தார். அப்போது வாடிவாசலில் இருந்து வெளிவந்த மற்றொரு காளை சீறி பாய்ந்து பழனியாண்டி மீது மோதியது.
மாட்டின் கொம்பு குத்தியதில் பலத்த காயமடைந்த அவர் சரிந்து விழுந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டது. காளை மாடு மோதி, மாட்டின் உரிமையாளர் ஒருவர் பலியான சம்பவம் ஜல்லிக்கட்டு திடலில் சோகத்தை ஏற்படுத்தியது.