இந்திய வானிலை ஆய்வு மைய வரலாற்றில் தென்மேற்கு பருவ காற்று இந்த ஆண்டு தான் தாமதமாக விலகுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் ந.புவியரசன் கூறும்போது, வழக்கத்தை விட இந்த வருடம் தென்மேற்கு பருவமழை நாட்டின் அனைத்து பகுதிகளிலும் அதிகமாக பெய்திருக்கிறது. ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் ஆகிய மாதங்களில் சராசரி அளவின்படி 10 சதவீதம் கூடுதலாக 88 சென்டிமீட்டர் மழை பெய்திருக்கிறது. 1994ம் ஆண்டுக்குப் பிறகு இந்த ஆண்டுதான் மழை இந்த அளவிற்கு பெய்திருக்கிறது.

நாடுமுழுவதும் இருக்கும் 36 வானிலை ஆய்வு மையங்களில் பதிவான அளவுகோலின்படி 2 இடங்களில் வழக்கத்தைவிட மிக அதிக மழை பெய்திருக்கிறது. 10 இடங்களில் அதிக மழையும் 19 இடங்களில் வழக்கமான அளவு மறையும் 5 இடங்களில் வழக்கத்தை விட குறைவாகவும் இருக்கிறது. கடந்த 50 ஆண்டுகால வானிலை ஆய்வு மைய தரவுகளின் படி தென்மேற்கு பருவக்காற்று வழக்கமாக ராஜஸ்தான் பகுதியில் செப்டம்பர் 1 ம் தேதி விலகத் தொடங்கும். பின்னர் டெல்லி. ஆந்திரா என விலகி தமிழகத்தில் விலகும்.

ஆனால் இந்த வருடம் அக்டோபர் 10ம் தேதி வாக்கில் தான் ராஜஸ்தானில் விலகத் தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதற்கு முன்பாக 1961ம் ஆண்டு அக்டோபர் 1ம் தேதியும் கடந்த 2007 ஆம் ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதியும் தென்மேற்கு பருவ காற்று விலகத் தொடங்கியதே அதிகபட்சமாக இருந்தது. தற்போது நடக்க இருப்பது இந்திய வானிலை ஆய்வு மைய வரலாற்றில் இல்லாத தாமதமாகும்.

தற்சமயம் பீகார் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருவதால் தென்மேற்கு பருவக்காற்று இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது. அது வலுவிழக்க தொடங்கியதும் தென்மேற்கு பருவக்காற்று விலகும். அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் வடகிழக்கு பருவக்காற்று வீசுவதற்கான சாதக சூழல் ஏற்படும். 

இவ்வாறு அவர் தெரிவித்தார்.