திருச்சி மாவட்டம் கல்லக்குடி அருகே இருக்கும் கே.கே நகர் பகுதியில் பொதுமக்கள் உபயோகப் படுத்துவதற்காக பொது கழிப்பறை ஒன்று இருக்கிறது. தினமும் காலை மற்றும் மாலை நேரம் பொதுமக்கள் அதை பயன்படுத்தி வந்தனர்.

நேற்று காலையில் வழக்கம் போல பொதுமக்கள் கழிவறைக்கு சென்றிருக்கின்றனர். அப்போது அங்கு ஒரு குழந்தையின் அழுகுரல் சத்தம் கேட்டிருக்கிறது. இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் சத்தம் வந்த பகுதிக்கு சென்று பார்த்திருக்கின்றனர்.

 அங்கே பிறந்து சில மணி நேரங்களே ஆன ஆண் குழந்தை அழுது கொண்டிருந்தது. பதறிப்போன பொதுமக்கள் உடனடியாக அந்த குழந்தையை கழிவறையில் இருந்து மீட்டனர். குழந்தையை கழிப்பறையில் வீசிச் சென்றது யார் என்று தெரியாத காரணத்தால் பொதுமக்கள் கல்லக்குடி காவல்துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த காவலர்கள் குழந்தையை பொதுமக்களிடம் இருந்து பெற்றுக்கொண்டனர். 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு மருத்துவர்கள் மூலமாக குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. காவல்துறையினர் திருச்சியில் இருக்கும் சைல்ட் லைன்க்கு தகவல் அளித்ததன் பேரில் அதன் உறுப்பினர்கள் மூலமாக குழந்தை திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அங்கு குழந்தையை செவிலியர்கள் பராமரித்து வருகின்றனர்.  தகாத உறவால் குழந்தை பிறந்து இருக்கலாம் என்றும் அதன் காரணமாக உறவினர்கள் அந்த குழந்தையை வீசி சென்று இருக்கக்கூடும் என்று காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து கல்லக்குடி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து குழந்தையின் தாயை தேடி வருகின்றனர்.