இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதை கட்டுப்படுத்தும் வகையில் மக்கள் சமூக விலகலை கடைபிடிக்க வலியுறுத்தி நாடு முழுவதும் 21 நாட்கள் அமலில் இருந்த ஊரடங்கு ஏப்ரல் 14ம் தேதியுடன் நிறைவடைய இருந்த நிலையில் மேலும் 19 நாட்களுக்கு நீட்டித்து பிரதமர் மோடி உத்தரவிட்டார். அதன்படி இந்தியாவில் மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என மத்திய அரசு அறிவித்திருக்கிறது. இந்நாட்களில் கடைகள், கல்வி நிறுவனங்கள், வணிக வளாகங்கள், தனியார் நிறுவனங்கள், பொது போக்குவரத்துக்கள் அனைத்தும் முடக்கப்பட்டு மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் இருக்க அரசு அறிவித்திருக்கிறது.

அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு மட்டுமே மக்கள் வெளிவர வேண்டும் என்றும் அதை தவிர்த்து பிற காரியங்களுக்கு எக்காரணம் கொண்டும் வெளிவரக் கூடாது என அரசு எச்சரித்து இருக்கிறது. தமிழகத்திலும் ஊரடங்கு உத்தரவு கடுமையாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அனைத்தும் மாவட்டங்களும் காவல்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டு தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆனால் அரசு அறிவுறுத்தலை மீறி பலர் வாகனங்களில் சுற்றி வருகின்றனர். கொரோனா வைரஸின் வீரியும் அறிந்தும் அலட்சியம் செய்து பொதுவெளியில் சுற்றுபவர்கள கைது செய்யும் போலீசார் வழக்கு பதிந்து தமிழகம் முழுவதும் தீவிர நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அதன்படி தற்போதைய நிலவரத்தில் தமிழகம் முழுவதும் 2,39,239 பேர் தடையை மீறி வாகனங்களில் சுற்றியதாக கைது செய்யப்பட்டிருக்கின்றனர். அவர்கள் மீது 2,24,952 வழக்குகள் போடப்பட்டுள்ளது. சுமார் 2,03,256 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு கடந்த 25 நாட்களில் 1,17,76,394 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டிருக்கிறது. கைதானவர்கள் அனைவரும் ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து தடையை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை பாயும் என காவல்துறை எச்சரித்துள்ளது. பல்வேறு மாவட்டங்களில் காவல் துறையினர் விழிப்புணர்வு பிரச்சாரங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். வீதி வீதியாக சென்று மக்களுக்கு பாதிப்பை எடுத்துக் கூறி அவர்கள் வீடுகளை விட்டு வெளி வருவதால் நிகழப்போகும் அபாயங்களையும் கூறி அறிவுறுத்தி வருகின்றனர்.