பிரசாரத்தின் போது திடீரென மயங்கிய அமைச்சர் நேரு; கலக்கத்தில் தொண்டர்கள்
பெரம்பலூர் தொகுதிக்கு உட்பட்ட கரூர் பகுதியில் தனது மகன் அருண் நேருவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய சென்ற அமைச்சர் கே.என்.நேரு உடல் நலம் பாதிக்கப்பட்டு பிரசாரம் தொடங்கியதுமே புறப்பட்டு சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் திமுக பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட திமுக சார்பில் அமைச்சர் கே.என். நேருவின் மகன் அருண் நேருவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து பெரம்பலூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் அருண் நேரு மற்றும் திமுக, கூட்டணிக்கட்சி நிர்வாகிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி பெரம்பலூர் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட குளித்தலை சட்டமன்ற தொகுதி பகுதிகளில் திமுக வேட்பாளர் அருண் நேரு தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இன்று (புதன்கிழமை) காலை கொசூர் பகுதியில் இருந்து பிரசாரம் துவங்கியபோது, நகர்புற மேம்பாட்டு துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு தனது மகன் அருண் நேருவுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.
அப்போது “எனக்கு மயக்கமாக இருக்கிறது. ஒரு வரி மட்டும் பேசிவிட்டு கிளம்புறேன்” என்று கூறிய அமைச்சர் கே.என்.நேரு, “எனது துறையின் கீழ் வரும் குடிநீர் வாரிய பிரச்சினைகளை இப்பகுதியில் கண்டிப்பாக தீர்த்து வைப்பேன்” எனத் தெரிவித்து முடித்துக்கொண்டு பிரசார வாகனத்தில் இருந்து கீழே இறங்கி தனது காரில் ஏறி மருத்துவமனைக்குச் சென்றார். இதனால் அப்பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.