திருச்சி கல்லூரி மாணவர்களுடன் பொங்கல் பண்டிகை கொண்டாடிய அமைச்சர் அன்பில் மகேஷ்!
திருச்சி கல்லூரியில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டார்
திருச்சி தேசியக் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. பல்வேறு துறைகளின் சார்பில் புதுப்பானை வைத்து புத்தரிசியிட்டு பொங்கலிடப்பட்டது. இந்த விழாவில் தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
விழாவில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, உழைத்துக் களைத்து ஓய்ந்து போன உழவன் தன் பயிர்த்தொழில் செழிக்க ஒத்துழைத்த கதிரவனுக்கும், காளைகளுக்கும் நன்றி பாராட்டும் பொருட்டு உறவுகளோடு ஒருங்கிணைந்து நடத்தும் பண்பாட்டு சமத்துவ விழாவே பொங்கல் விழா என்று பொங்கல் உரை நிகழ்த்தினார்.
அதன்பின்னர், மாணவர்களுடன் சேர்ந்து உரியடியில் கலந்துகொண்டு அமைச்சர் அன்பில் மகேஷ் பானை உடைத்தார். இதனை கண்ட மாணவர்கள் உற்சாகத்துடன் கூச்சலிட்டனர். தொடர்ந்து, அமைச்சருடன் மாணவர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
ஆயி பூரணம் அம்மாளுக்கு அரசு சார்பில் சிறப்பு விருது: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!
விழாவில் உரியடி, மாட்டு வண்டி, குதிரை வண்டி, சிலம்பாட்டம், சேவல் சண்டை, கயிறு இழுத்தல், மாணவ, மாணவிகளின் நடனம் என்று பண்பாட்டைப் பறைசாற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த நிகழ்ச்சியில், கல்லூரி முதல்வர் முனைவர் ககுமார், துணைமுதல்வர் முனைவர் பிரசன்ன பாலாஜி பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர்.