16 லட்சத்தை திருடிய வங்கி கொள்ளையன் - தீவிரவாதிகள் ஊடுருவல் சோதனையில் சிக்கினான் ..
திருச்சியில் இருக்கும் ஒரு தனியார் வங்கியில் 16 லட்சத்தை திருடியிருந்த கொள்ளையனை தீவிரவாதிகள் ஊடுருவல் சோதனையின் போது காவல்துறை கைது செய்தனர் .
கடந்த ஆகஸ்ட் 20 ம் தேதி திருச்சியில் ஏடிஎம் மெஷினில் பணம் நிரப்புவதற்காக தனியார் நிறுவனத்தை சார்ந்த பணியாளர்கள் செக் கொடுத்து ஒரு வங்கியில் பணம் பெற்றிருக்கின்றனர் .இதை நோட்டமிட்டு கொண்டிருந்த மர்ம நபர் ஒருவர் அந்த தனியார் நிறுவன ஊழியர்களின் கவனத்தை திசை திருப்பி அவர்களிடம் இருந்த 16 லட்சத்தை கொள்ளையடித்து விட்டு தப்பி ஓடி விட்டான் . இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் காவல்துறையிடம் தனியார் நிறுவனம் சார்பாக புகார் அளித்தனர் .
அந்த புகாரின் அடிப்படையில் காவல் துறை தனிப்படை அமைத்து கொள்ளையனை தேடி வந்தனர் . இந்த நிலையில் தமிழகத்தில் தீவிரவாதிகள் ஊடுருவியிருப்பதாக உளவுத்துறை எச்சரித்திருந்ததை தொடர்ந்து மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது .
சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு பல இடங்களில் தீவிர கண்காணிப்பு போடப்பட்டிருந்தது . பெரம்பலூரிலும் சோதனையில் காவல்துறையினர் ஈடுபட்டிருந்தனர் . அப்போது அந்த வழியாக ஒரு நபர் சந்தேகம் கொள்ளும்படியாக வந்திருக்கிறார் . அவரை சோதனை செய்ததில் 15.70 லட்சம் ரூபாய் வைத்திருந்திருக்கிறார் . அதுகுறித்து கேட்டபோது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்திருக்கிறார் .
இதனால் காவல்துறை அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டதில் திருச்சி வங்கியில் 16 லட்சத்தை கொள்ளையடித்த நபர் என்று தெரியவந்தது . இதையடுத்து திருச்சி பாலக்கரையை சேர்ந்த அவரை காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்தனர் . இதுகுறித்த விசாரணை நடந்து வருகிறது.