திருச்சியில் கள்ளக்காதலி அடித்து கொலை; வியாபாரிக்கு நீதிமன்றம் 21 ஆண்டு சிறை தண்டனை

திருச்சி அருகே கள்ளக்காதலியை அடித்து கொலை செய்த வியாபாரிக்கு 21 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

man gets 21 years prison who killed her girlfriend in trichy vel

திருச்சி மாவட்டம், லால்குடி அடுத்துள்ள கள்ளக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் நாகராஜ். இவர் தள்ளுவண்டியில் சீப்பு, கண்ணாடி, வளையல், வீட்டு பொருட்கள் வியாபாரம் செய்து குடும்பம் நடத்தி வந்தார். இதேபோல் லால்குடி  பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இருவரும் நண்பர்கள் என்பதால் நாகராஜ் அடிக்கடி ராஜேந்திரன் வீட்டிற்கு சென்று வந்துள்ளார். இதில் ராஜேந்திரனின் மனைவி செல்விக்கும், நாகராஜுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு பின்பு திருமணத்தை மீறிய உறவாக மாறியுள்ளது.

இந்த நிலையில், செல்விக்கு சில காலத்திற்குப் பிறகு விருப்பம் இல்லாததால் அவரை விட்டு விலக ஆரம்பித்துள்ளார். ஆனால், நாகராஜ் செல்வியை விடுவதாக இல்லை. இதனால் செல்வியை தீர்த்து கட்ட வேண்டும் என்று முடிவு செய்த நாகராஜ் கடந்த 2007 ஆம் ஆண்டு ஆசை வார்த்தை கூறி  திருச்சி ஸ்ரீரங்கம் அருகிலுள்ள கொள்ளிடம் ஆற்றங்கரைக்கு அழைத்து சென்றார். பின்பு இருவரும் தனிமையில் இருந்த போது அவர் மறைத்து வைத்திருந்த இரும்பு கம்பியால் செல்வியை தலையில் சரமாரியாக தாக்கினார். இதில் செல்வி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து ஸ்ரீரங்கம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து நாகராஜனை கைது செய்தனர். இந்த வழக்கானது திருச்சி மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், நீதிபதி ஸ்ரீவர்ஷன் இறுதிக்கட்ட விசாரணை நடத்தி இன்று தீர்ப்பளித்தார். அதில் செல்வியை கொலை செய்த நாகராஜுக்கு 14 ஆண்டு ஆயுள் தண்டனையும், கொலை செய்யும் நோக்கில் கடத்திச் சென்ற குற்றத்திற்கு ஏழு ஆண்டு சிறை தண்டனையும் என 21 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேலும், இதை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும். மேலும் முதல் பிரிவுக்கு 10,000 இரண்டாவது பிரிவுக்கு 5000 என அபராதம் விதித்தார். இதை கட்ட தவறினால் ஒன்பது மாதங்கள் கூடுதல் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios