திருச்சியில் பெண் மருத்துவர் விஷ ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பெண் மருத்துவர் காதலித்ததாக கூறப்படும் சென்னை மருத்துவரிடம் போலீசார் விசாரணை நடத்த உள்ளனர். 

திருச்சி தாராநல்லூர் விஸ்வாஸ் நகரைச் சேர்ந்தவர் ஜெயச்சந்திரன். இவர் காந்தி மார்க்கெட்டில் அரிசி வியாபாரம் செய்து வருகிறார். இவரது மகள் புனிதவதி (31). சென்னை மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். எம்.டி. படித்து முடித்துள்ளார். திருச்சியில் அரசு மருத்துவமனையில் புனிதவதி வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், நேற்று புனிதவதியின் பெற்றோர் குலதெய்வம் கோவிலுக்கு சென்றனர். மகளையும் கோவிலுக்கு வரும்படி அழைத்துள்ளனர். ஆனால், அவர் வரவில்லை. இதனால், அவரை தனியாக வீட்டில் விட்டு  பெற்றோர் கோவிலுக்கு சென்றுவிட்டனர். 

கோவிலுக்கு சென்று இரவு வீடு திரும்பினர். அப்போது, புனிதவதியின் அறையில் லைட் எரிந்து கொண்டிருந்தது. மகள் படித்து கொண்டிருக்கிறார் என நினைத்து பெற்றோர் தூங்க சென்றுவிட்டனர். அதிகாலை எழுந்த போதும் மகள் அறையில் லைட் எரிந்ததால் சந்தேகமடைந்த தந்தை அவரது அறைக்குச் சென்ற போது அவர் மயங்கி நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். 

புனிதவதி உடல் அருகில் மருந்து பாட்டிலும், ஊசியும் கிடந்தது. இதனால் அவர் தனக்குத் தானே வி‌ஷஊசி போட்டு இருக்கலாம் என்று சந்தேகம் அடைந்த தந்தை ஜெயச்சந்திரன் அவசர அவசரமாக புனிதவதியை திருச்சி மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியதால் குடும்பத்தினர் கதறினர். இதனையடுத்து, காந்தி மார்க்கெட் காவால் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்த தற்கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் புனிதவதி காதல் தோல்வியால் தற்கொலை செய்ததாக முதற்கட்ட தகவலில் தெரியவந்துள்ளது. அவரை காதலித்து ஏமாற்றிய சென்னை மருத்துவர் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. பிரேத பரிசோதனை முடிவில் புனிதவதி எந்த வகை ஊசியை மருந்தாக பயன்படுத்தி தற்கொலை செய்தார் என்பது தெரியவரும். இந்த சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.