திருச்சியில் இருக்கும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயம் உலகப்புகழ் பெற்றது. இங்கு மார்கழி மாதத்தில் வைகுண்ட ஏகாதசி அன்று நடைபெறும் சொர்க்கவாசல் திறப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பக்தர்களால் கருதப்படுகிறது. மார்கழி மாதத்தில் பெருமாளை நினைத்து ஆண்டாள் பாடிய திருப்பாவையையும் மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை பாடி கன்னிப்பெண்கள் விரதம் மேற்கொள்வது ஆதிகாலம் தொட்டு நடந்து வருகிறது.

வைணவர்கள் மட்டுமன்றி சைவப் பெருமக்களும் கடவுளை போற்றி வணங்கும் மாதமாக மார்கழி இருக்கிறது. இந்த மாதத்தில்தான் பெருமாளுக்கு உகந்த வைகுண்ட ஏகாதசியும் ஈசனுக்கு உகந்த நாளான திருவாதிரை திருநாளும் வருகிறது. வைணவ ஆலயங்களில் வைகுண்ட ஏகாதசி விமர்சையாக கொண்டாடப்படும். இந்த விழா மொத்தம் 21 நாட்கள் கொண்டாடப்படுகிறது. அதில் முதல் பத்து நாட்கள் பகல் பத்து எனவும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு அடுத்த பத்து நாட்கள் இராப்பத்து எனவும் புராணங்களில் கூறப்படுகிறது. இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி திருவிழா இன்று தொடங்குகிறது.

trichy

இன்றிலிருந்து ஜனவரி மாதம் 5ம் தேதி வரை பகல்பத்து விழா நடக்கிறது. ஜனவரி 6ம் தேதி அன்று சொர்க்கவாசல் திறக்கப்பட்டு வைகுண்ட ஏகாதசி திருநாள் கொண்டாடப்படுகிறது. அதன் பிறகு 10 நாட்கள் இராப்பத்து கடைபிடிக்கப்படும். இந்த நிலையில் வைகுண்ட ஏகாதசி திருநாளை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் ஜனவரி 6ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருக்கிறார். ஜனவரி 6ம் தேதியன்று மாவட்டத்தில் இருக்கும் பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்கள் அனைத்திற்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக ஆட்சியர் சிவராசு தெரிவித்திருக்கிறார். அதற்கு பதிலாக ஜனவரி 25ம் நாள் வேலை நாளாக கடைபிடிக்கப்படும் எனவும் கூறியிருக்கிறார்.