திருச்சி அருகே நடுக்காட்டிப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் கடந்த வெள்ளிக்கிழமை விழுந்த குழந்தை சுர்ஜித்தை மீட்பதற்காக தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இரண்டு ராட்சத இயந்திரங்கள் மூலமாக பள்ளம் தோண்டப்பட்டு வந்த நிலையில் ஆழ்துளை கிணறு அமைந்திருக்கும் பகுதி கடினமான பாறைகளை  கொண்டிருப்பதால் மீட்பு பணிகளில் சிரமம் ஏற்பட்டு இருக்கிறது. 87 அடியில் குழந்தை சிக்கியிருக்கும் நிலையில் தற்போது வரை 40 அடியில் தான் பள்ளம் தோண்டப்பட்டு இருக்கிறது. இதனால் மாற்றுவழிகள் குறித்து ஆலோசித்து வருவதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில் குழந்தை சுர்ஜித்தை மீட்கும் நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபடுவோம் என்று வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது ,ஜெர்மன் நாட்டில் தயாரிக்கப்பட்ட இயந்திரங்கள் மூலமாக குழி தோண்டப்பட்டும் பலன் ஏற்படவில்லை என்றும் கடினமான பாறைகள் இருப்பதால் நேரம் அதிகரித்துக்கொண்டே செல்வதாக கூறினார். இது டெக்னிக்கல் ஆப்ரேஷன் என்பதால் நிபுணத்துவம் கொண்ட குழு மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருவதாக ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

குழந்தை 87 அடியில் சிக்கியிருக்கும் நிலையில் 98 அடி வரை பள்ளம் தோண்டிய பிறகு, குறுக்கே குழி தோண்ட முடிவு செய்திருப்பதாக கூறிய ராதாகிருஷ்ணன் தொடர்ந்து தோண்டினால் கரிசல்மண் தென்பட வாய்ப்பிருப்பதால் மீட்புப் பணியை துரிதப்படுத்த உள்ளதாக தெரிவித்தார். மேலும் எந்த விதத்திலும் மீட்பு பணியை கைவிட மாட்டோம் என்றும் கடைசி விளிம்பு வரை முயற்சியை தொடர்வோம் என்று தெரிவித்தார். இந்த பணிகள் முடிவடைய இன்னும் 12 மணி நேரம் ஆகலாம் என்றும் கூறியிருக்கிறார்