திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே இருக்கிறது மாவனூர் இடையப்பட்டி கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் பிச்சாண்டவர். இவரது மனைவி தாமரைச் செல்வி. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த தாமரைச்செல்வி மணப்பாறை தலைமை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு கடந்த மார்ச் மாதம் 9ம் தேதி அங்கு பெண் குழந்தை பிறந்தது. பச்சிளம் பெண் குழந்தை ஆரோக்கியமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். குழந்தை பிறந்த மறுநாள் அதற்கு முதல் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து 5 நாளில் தாயும் குழந்தையும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

வீட்டிற்கு வந்த பிறகு குழந்தைக்கு தடுப்பூசி போடப்பட்ட இடத்தில் வீக்கம் இருந்துள்ளது. அடிக்கடி காய்ச்சல் வந்து குழந்தை அழுதுகொண்டே இருந்துள்ளது. இந்த நிலையில் இரண்டாவது தடுப்பூசி போடுவதற்காக குழந்தையை மரவனூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பாட்டி அமிர்த வள்ளி கொண்டு சென்றுள்ளார். அங்கு குழந்தையின் வீக்கம் குறித்து செவிலியர்களிடம் விசாரிக்கவே ஐஸ்கட்டி வைத்தால் சரியாகி விடும் என தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் நேற்று காலை அமிர்த வள்ளி குழந்தையை குளிப்பாட்டி இருக்கிறார்.

அப்போது குழந்தையின் தொடைப்பகுதியில் ஊசி போன்று ஒரு சிறிய பொருள் தென்பட்டுள்ளது. அதிர்ச்சியடைந்த அவர் அதை பக்குவமாக வெளியே எடுத்து பார்த்தபோது, தடுப்பூசியின் உடைந்த பாகம் குழந்தையின் உடலில் இருந்துள்ளது. பதறிப்போன குடும்பத்தினர் மணப்பாறை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு சென்றனர். அங்கு தலைமை மருத்துவர் வில்லியம் ஆண்ட்ரூசிடம் அதுதொடர்பாக வாக்குவாதம் செய்தனர். உரிய விசாரணை செய்வதாக அவர் உறுதி அளித்திருக்கிறார். குழந்தைக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அரசு மருத்துவனையின் அலட்சியத்தால் பிறந்த குழந்தையின் உடலில் 70 நாட்களுக்கும் மேலாக தடுப்பூசியின் உடைந்த பாகம் இருந்தது அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது.