அதிகாலை முதல் வெளுத்து வாங்கும் கனமழை..! 48 மணிநேரத்திற்கு எச்சரிக்கை..!
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் அதிகாலை முதல் பலத்த மழை பெய்து வருகிறது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தற்போது நிறைவடையும் தருவாயில் இருக்கிறது. எனினும் அடுத்து வரும் சில தினங்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தெரிவித்திருந்தது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்ட மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் இன்று அதிகாலை முதல் மாநிலத்தின் பல்வேறு இடங்களிலும் கனமழை பெய்து வருகிறது.
திருச்சி மாவட்டத்தில் காலையில் பெய்ய தொடங்கிய மழை தற்போது வரை நீடிக்கிறது. அதே போல தஞ்சை, கரூர், கடலூர், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. தலைநகர் சென்னையிலும் பலத்த மழை பெய்கிறது. வேளச்சேரி, கிண்டி, கோயம்பேடு, திருவான்மியூர், அடையார், தி.நகர், வடபழனி, தாம்பரம் உட்பட நகரின் பெரும்பாலான இடங்களில் நேற்று இரவு முதல் மழை விட்டுவிட்டு பெய்கிறது.
சாலைகளில் தண்ணீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சியளிப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. அடுத்த 2 நாட்களுக்கு நாகை, தூத்துக்குடி, தஞ்சாவூர், திருவாரூர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் நேற்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.