தமிழகத்தில் அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை பெய்ய தொடங்கியது. அது முதல் மாநிலத்தின் பல்வேறு இடங்களிலும் கனமழை கொட்டித்தீர்த்தது. இதன்காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்ட அளவு வேகமாக உயரத் தொடங்கியது. முக்கிய அணைகள் பல நிரம்பி ஆறுகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடியது. சென்னையிலும் பலத்த மழை பெய்ததால் நிலத்தடி நீர்மட்டம் ஓரளவு உயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.

தற்போது வடகிழக்கு பருவமழை நிறைவடையும் கட்டத்தில் இருக்கிறது, எனினும் தென்மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை நீடித்து வருகிறது. திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் 3 நாட்களுக்கும் மேலாக பரவலாக மழை பெய்கிறது. இதனிடையே அடுத்த 48 மணி நேரத்திற்கு டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது.

தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் டெல்டா மற்றும் உள்மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்ய கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும் என வானிலை மைய அதிகாரி புவியரசன் கூறியுள்ளார். தலைநகர் சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்தார்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக வேதாரண்யம், சீர்காழி, கொள்ளிடம்,சிதம்பரம் ஆகிய இடங்களில் 1 சென்டிமீட்டர் அளவு மழை பதிவாகி இருக்கிறது.