டெல்டா மற்றும் தென்மாவட்டங்களில் கொட்டித் தீர்க்க போகும் கனமழை..! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!
காவிரி டெல்டா மற்றும் தென்மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்ய இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இரண்டு நாட்களுக்கு முன்னர் தொடங்கியது. இதையடுத்து தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இனி வரும் நாட்களில் பருவமழை தீவிரமடையும் என்று வானிலை மையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்ய இருப்பதாக தற்போது எச்சரித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறும் போது, தென்மேற்கு வங்கக்கடலில் வளிமண்டலத்தில் ஏற்பற்றிருக்கும் மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்து வரும் 4 நாட்களுக்கு தமிழகத்தில் பரவலாக மழை பெய்ய இருப்பதாக கூறியுள்ளார். டெல்டா மாவட்டங்கள் மற்றும் நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம் போன்ற தென்மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவித்தார்.
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் கூறினார். மேலும் கேரளா, கர்நாடகா, மத்திய அரபிக் கடல் பகுதியில் மீனவர்கள் 3 நாட்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளார்.