உள்மாவட்டங்களில் வெளுத்து வாங்க இருக்கும் கனமழை..! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!
வளிமண்டலத்தில் ஏற்பட்டிருக்கும் மேலடுக்கு சுழற்சி காரணமாக உள்மாவட்டங்களில் கனமழை பெய்ய இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தமிழகத்தில் வெப்ப சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்து சில நாட்களாக கன மழை பெய்து வந்தது. இந்த நிலையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுவையில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
வளிமண்டலத்தில் ஏற்பட்டிருக்கும் மேலடுக்கு சுழற்சி காரணமாக வடக்கு மற்றும் உள்மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும்.
சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இரவில் லேசான மழைக்கு வாய்ப்பிருக்கிறது.
இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.