இரும்புக்கடையில் நடந்த நூதன திருட்டு.. நாடு விட்டு நாடு வந்து கை வரிசை காட்டிய தம்பதி!!
திருச்சி அருகே வெளிநாட்டு தம்பதியினர் இரும்பு கடை ஒன்றில் நூதன முறையில் திருட்டில் ஈடுபட்டுள்ளனர். அவர்களை காவல்துறை வலைவீசி தேடி வருகின்றது.
திருச்சி அருகே இருக்கும் மணப்பாறையைச் சேர்ந்தவர் பர்ஷத் அலி. இவர் திருச்சி சாலையில் இரும்பு கடை வைத்து நடத்தி வருகிறார். தினமும் பலர் இவர் கடைக்கு வந்து செல்வார்கள் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று இவரின் கடைக்கு இரண்டு வெளிநாட்டினர் வந்திருக்கின்றனர். துருக்கி நாட்டைச் சேர்ந்த இருவரும் கணவன்,மனைவி என்று தெரிகிறது. பர்ஷத் அலியின் கடையில் பொருள்களை வாங்கிய அவர்கள் அதற்கான பணத்தைக் கொடுத்துள்ளனர்.
பின்னர் தங்களிடம் இருந்த சில்லரை நோட்டுகளை கொடுத்து பர்ஷத் அலியிடம் குறிப்பிட்ட சீரியல் எண் கொண்ட 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை கேட்டுள்ளனர். அந்த நேரத்தில் அவரின் கவனத்தை திசை திருப்பிய அந்த வெளிநாட்டு தம்பதி கடையில் இருந்த 17 ஆயிரம் ரூபாயை கொள்ளையடித்து விட்டு தப்பி விட்டனர்.
சிறிது நேரத்தில் கடையில் இருந்த பணம் திருடு போனதைப் பார்த்து பர்ஷத் அலி அதிர்ச்சி அடைந்திருக்கிறார். கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து பார்த்ததில், பணத்தை வெளிநாட்டு தம்பதியினர் திருடிச் சென்றது தெரிய வந்தது.
உடனே இதுகுறித்து மணப்பாறை காவல்நிலையத்தில் பர்ஷத் அலி புகார் அளித்தார். அவரின் புகாரின் அடிப்படையில் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து துருக்கி நாட்டைச் சேர்ந்த இருவரையும் காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.