8 ஆண்டுகளுக்கு பிறகு உள்ளாட்சித்தேர்தல்..! சற்றுநேரத்தில் வாக்குப்பதிவு தொடக்கம்..!
தமிழகத்தில் முதற்கட்ட உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.
நீண்ட இழுபறிக்கு பிறகு தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பாணையை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. ஊரக பகுதிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 9ம் தேதி தொடங்கி 16ம் தேதி நிறைவு பெற்றது.
தகுதி பெற்ற வேட்பாளர்கள் கடந்த சில நாட்களாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தனர். முதற்கட்ட தேர்தலுக்கான இறுதிக்கட்ட பிரச்சாரம் நேற்று முன்தினம் நிறைவு பெற்ற நிலையில் இன்று வாக்குப் பதிவு நடைபெற இருக்கிறது. சரியாக காலை 7 மணியளவில் வாக்குப்பதிவு தொடங்குகிறது. மக்கள் எந்தவித சிரமமும் இன்றி வாக்களிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. ஊரக பகுதிகளுக்கான தேர்தல் வாக்குச்சீட்டு முறையிலேயே நடத்தப்படுகிறது.
இதற்கான சீட்டுகள் அச்சடிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தேர்தல் நடைபெறும் 27 மாவட்டங்களிலும் பலத்த பாதுகாப்புகள் போடப்பட்டுள்ளன. சுமார் 60 ஆயிரம் போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தேர்தல் நடைபெறும் இருதினங்களிலும் தமிழக அரசு பொதுவிடுமுறை அளித்திருக்கிறது. மதுபான கடைகள் அனைத்தும் மூடவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.