திருச்சியில் அதிர்ச்சி..! விடுதியில் தூக்கிட்டு இன்ஜினியரிங் மாணவி தற்கொலை..!
திருச்சி அண்ணா பல்கலைக்கழக மாணவி ஒருவர் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
தர்மபுரியைச் சேர்ந்தவர் ஜெயவேல். இவரது மகள் லோகேஸ்வரி(20). திருச்சியில் இருக்கும் அண்ணா பல்கலைக்கழகத்தில் இறுதி ஆண்டு படித்து வந்துள்ளார். தனியார் விடுதியில் தங்கியிருக்கும் லோகேஸ்வரி தர்மபுரியில் இருக்கும் வீட்டிற்கு அவ்வப்போது சென்று வந்துள்ளார். ஜெயவேலிற்கு அதிகமான கடன்சுமை இருப்பதாக தெரிகிறது. இதனால் லோகேஸ்வரி மன உளைச்சலில் இருந்துள்ளார்.
லோகேஸ்வரிக்கும் அதே கல்லூரியில் படிக்கும் தர்மபுரியைச் சேர்ந்த மாணவர் ஒருவருக்கும் காதல் இருந்து வந்துள்ளது. இரு வீட்டாருக்கும் காதல் விவகாரம் தெரிய வந்து, திருமணத்திற்கும் ஒப்புதல் வழங்கியுள்ளனர். இந்தநிலையில் அதிகமான கடன் தொல்லையால் தந்தை அவதிப்படவே கல்வி உதவித்தொகை பெற்று படிப்பை தொடர முடிவு செய்திருக்கிறார். இதற்காக விண்ணப்பம் பெறுவதற்காக காதலனை அழைத்துள்ளார். ஆனால் அவர் வர மறுத்ததாக தெரிகிறது.
இதனிடையே மனஉளைச்சலில் இருந்த லோகேஸ்வரி, நேற்று தனது விடுதி அறையில் இருக்கும் மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து விடுதி நிர்வாகம் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தது. விரைந்து வந்த காவலர்கள் உயிரிழந்த லோகேஸ்வரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர். வழக்கு பதிவு செய்திருக்கும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.