திருச்சி அருகே மின்சாரம் தாக்கியதில் கணவன், மனைவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

திருச்சி மாவட்டம் மணப்பாறை பிள்ளையார்கோவில்பட்டி அருகே உள்ள சித்தம்பட்டியை சேர்ந்தவர் தர்மன் (30) ஓட்டுநராக இருந்து வருகிறார். 
இவரது மனைவி ஜான்சிராணி (25). பி.எட். பட்டப்படிப்பை முடித்துள்ளார். 

இவர்களது வீட்டின் அருகே துணி காயப்போடுவதற்காக கம்பியால் கொடிகட்டி உள்ளனர். நேற்று காற்று அதிவேகமாக வீசியதால், அந்த வழியாக அமைக்கப்பட்டிருந்த மின்வயர் கொடி கம்பி மீது எதிர்பாராத விதமாக உரசியது. இதை கவனிக்காமல் காயப்போட்ட துணியை ஜான்சிராணி எடுத்தார்.

 

அப்போது, அவரை மின்சாரம் தாக்கியது. இதனால் அலறி துடித்த மனைவியை, கணவர் தர்மன் காப்பாற்ற முயன்றுள்ளார். அவரையும் மின்சாரம் தாக்கி இருவரும் தூக்கிவீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உயிரிழந்த கணவன்-மனைவி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஒரே நேரத்தில் கணவன்-மனைவி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.