Asianet News TamilAsianet News Tamil

முப்போகம் விளையும் நிலங்களை மலடாக்கத் துடிப்பது எந்த வகையில் நியாயம்? ராமதாஸ் காட்டம்...

காவிரி பாசன மாவட்டங்களை சீரழிக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு காவிரி பாசன மாவட்டங்களில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், மீண்டும், மீண்டும் அத்தகைய திட்டங்களை ஓ.என்.ஜி.சி. திணிப்பது கண்டிக்கத்தக்கது  என ராமதாஸ் கூறியுள்ளார்.

Dr.Ramadoss Against ONGC plan
Author
Chennai, First Published Oct 3, 2019, 1:17 PM IST

காவிரி பாசன மாவட்டங்களை சீரழிக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு காவிரி பாசன மாவட்டங்களில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், மீண்டும், மீண்டும் அத்தகைய திட்டங்களை ஓ.என்.ஜி.சி. திணிப்பது கண்டிக்கத்தக்கது  என ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; காவிரிப் படுகையை எண்ணெய் வயல்களாக மாற்றும் நடவடிக்கைகளின் அடுத்தக்கட்டமாக காவிரி பாசன மாவட்டங்களில் மேலும் 44 ஹைட்ரோ கார்பன் கிணறுகளை அமைக்க அனுமதி கோரி மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் ஓ.என்.ஜி.சி நிறுவனம் விண்ணப்பித்துள்ளது. காவிரி பாசன மாவட்டங்களை சீரழிக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு காவிரி பாசன மாவட்டங்களில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், மீண்டும், மீண்டும் அத்தகைய திட்டங்களை ஓ.என்.ஜி.சி. திணிப்பது கண்டிக்கத்தக்கது 

ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் புதிய 44 ஹைட்ரோ கார்பன் கிணறுகள் இரு உரிமங்களின் அடிப்படையில் கடலூர், நாகப்பட்டினம், இராமநாதபுரம், சிவகங்கை ஆகிய நான்கு தமிழக மாவட்டங்களிலும், புதுச்சேரி மாநிலத்தின் காரைக்கால் மாவட்டத்திலும் அமைக்கப்படவுள்ளன. காவிரி பாசன மாவட்டங்களில் ஏற்கனவே 200-க்கும் கூடுதலான எண்ணெய்க் கிணறுகளை அமைத்துள்ள ஓ.என்.ஜி.சி நிறுவனம், அவற்றிலிருந்து கோடிக்கணக்கான டன் கச்சா எண்ணெயை எடுத்து வருகிறது. இதனால் விவசாயம் பாதிக்கப்படுவது ஒருபுறமிருக்க, சுற்றுச் சூழலுக்கும் சரி செய்ய முடியாத அளவுக்கு போசமான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

அதுமட்டுமின்றி, காவிரி பாசன மாவட்டங்களில் மேலும் 104 கிணறுகளை அமைப்பதற்கு அனுமதி கோரி கடந்த ஜூன் மாதத்தில் மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சகத்திடம் ஓ.என்.ஜி.சி அமைச்சகம் விண்ணப்பித்துள்ளது. அவற்றுடன் சேர்த்து மேலும் 44 எண்ணெய் கிணறுகளையும் அமைத்தால் காவிரி பாசன மாவட்டங்கள் வாழத்தகுதியற்ற மாவட்டங்களாக மாறுவதை யாராலும் தடுக்க முடியாது.

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த தனியார் நிறுவனம் ஒன்றுக்கு கடந்த 2017-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மத்திய அரசு உரிமம் வழங்கியது. அதை எதிர்த்து அப்பகுதி மக்களும், அரசியல் கட்சிகளும் கடுமையாக போராடியதன் விளைவாக அத்திட்டம் முடக்கி வைக்கப்பட்டுள்ளது. அன்று முதல் இன்று வரை இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக காவிரி பாசன மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை செயல்படுத்துவதற்கு தமிழக மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தமிழக மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்ட மாநில தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களைச் செயல்படுத்த அனுமதிக்க முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்து விட்டது. இவ்வளவுக்குப் பிறகும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு மத்திய பெட்ரோலியம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகங்கள் அனுமதி அளிப்பது தமிழக மக்களை அவமதிக்கும் செயலாகும்.

இந்தியாவில் பெட்ரோலியப் பொருட்களின் தேவை அதிகரித்து வருவதாகவும், அதை சமாளிக்கும் வகையில் உள்ளூரில் பெட்ரோலியப் பொருட்களின் உற்பத்தியை மேம்படுத்த வேண்டும் என்பதாலும் தான் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்படுவதாக மத்திய அரசு கூறியிருக்கிறது. மத்திய அரசின் இந்த நோக்கம் நியாயமானதாக இருக்கலாம். ஆனால், ஹைட்ரோ கார்பன் திட்டங்களை செயல்படுத்துவதற்காக முப்போகம் விளையும் நிலங்களை மலடாக்கத் துடிப்பது எந்த வகையில் நியாயம்? 

ஹைட்ரோ கார்பன் திட்டங்களை செயல்படுத்தி பெட்ரோலியப்- பொருட்களை உற்பத்தி செய்வதை யாரும் எதிர்க்கவில்லை. மாறாக, விளைநிலங்கள் மிகுந்த காவிரி பாசன மாவட்டங்களை விடுத்து, பாதிப்பில்லாத வகையில் வேறு மாநிலங்களில் நடத்திக் கொள்ளலாம் என்பது தான் பா.ம.க.வின் நிலை ஆகும். உலகின் வறுமை மிகுந்த நாடுகளில் கூட மக்களுக்கு பாதிப்பில்லாத வகையில் தான் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இந்தியாவில் மட்டும் மக்களின் கருத்துகளுக்கு மதிப்பளிக்காமல் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை மத்திய அரசு தொடர்ந்து திணிக்கிறது. இதை நியாயப்படுத்த முடியாது.

தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தும், காவிரி பாசன மாவட்டங்களின் செழுமையை பாதுகாக்கும் வகையிலும் அங்கு இனி எந்தவொரு ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கும் அனுமதி அளிக்கக் கூடாது. ஓ.என்.ஜி.சி சார்பில் 44 இடங்களில் ஹைட்ரோ கார்பன் கிணறுகளை அமைக்க அனுமதி கேட்டு தாக்கல் செய்யப்பட்டுள்ள விண்ணப்பத்தை மத்திய அரசு நிராகரிக்க வேண்டும். அதேநேரத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களில் இருந்து காவிரி பாசன மாவட்டங்களை நிரந்தரமாக பாதுக்காக்க அவற்றை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என இவ்வாறு கூறியுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios