கொரோனா நேரத்தில் கூட்டம் கூட்டி ஆட்டம் காட்டிய திமுக... 6 காவல்நிலையங்களில் பாய்ந்தது வழக்கு...!
திருச்சியில் நேற்று நடைபெற்ற திமுக பொதுக்கூட்டம் தொடர்பாக ஆறு காவல் நிலையங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஏப்ரல் 6ம் தேதி தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. எனவே அரசியல் கட்சியினர் தீவிர பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். தேர்தல் நேரத்தில் எழுச்சி ஏற்படுத்துவதாக திமுக தலைவர் ஸ்டாலின் மாநாட்டை அறிவித்திருந்தார்.
திருச்சி சிறுகனூரில் தமிழகத்தின் விடியலுக்கான முழக்கம் என்ற தலைப்பில் திமுக பிரம்மாண்ட மாநாடு நேற்று நடந்தது. இதில் லட்சக்கணக்கான திமுகவினர் கலந்து கொண்டனர். தேர்தல் நேரத்தில் திமுகவின் இந்த மாநாடு கவனத்தை ஈர்க்கும் விதமாக அமைந்தது.
இந்த பொதுக்கூட்டத்திற்காக கட் அவுட்கள், திமுக கொடி என திருச்சி மாநகரம் களைகட்டியது. பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய ஸ்டாலின், அடுத்த 10 ஆண்டுகளில் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி ஏற்படும் .ஆண்டுக்கு 10 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு வேலையில்லாத் திண்டாட்டம் சரிபாதியாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். ரேஷன் பொருட்கள் வாங்கும் அனைத்து குடும்ப தலைவிகளுக்கு மாதம்தோறும் ரூபாய் 1000 உரிமைத் தொகை வழங்கப்படும் என்று அறிவித்தார்.
இந்நிலையில் திருச்சியில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் விதிமீறல்கள் நடந்ததாக 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக திருச்சி நகரில் மூன்று காவல் நிலையங்களிலும் மாவட்ட பகுதிகளில் மூன்று இடங்களிலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திமுக பொதுக் கூட்டத்தில் கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறியதாகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பொதுக்கூட்டம் குறித்து ஏற்கனவே அரசு மற்றும் காவல்நிலையங்களில் முறையாக அறிவித்த பிறகே கூட்டம் நடந்துள்ளது. ஆனால் கொரோனா காலக்கட்டத்தில் லட்சக்கணக்கானோரை ஒரே இடத்தில் குவிந்ததாக குற்றச்சாட்டு எழுத்துள்ளது.