திருச்சியில் போலீஸ் ஸ்டேசன் வாரியாக கத்தை கத்தையாக லஞ்சம்..! விசாரணையை துவங்கிய தேர்தல் அதிகாரிகள்..!
திருச்சியில் தேர்தல் பறக்கும் படையினரின் நடமாட்டத்தை அறிந்து கொள்ள காவல் நிலையம் வாரியாக லஞ்சம் கொடுக்கப்பட்ட விவகாரத்தில் தேர்தல் அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
திருச்சியில் தேர்தல் பறக்கும் படையினரின் நடமாட்டத்தை அறிந்து கொள்ள காவல் நிலையம் வாரியாக லஞ்சம் கொடுக்கப்பட்ட விவகாரத்தில் தேர்தல் அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் தீவிரமாகியுள்ள நிலையில் தேர்தல் பறக்கும் படையினர் கண்கொத்திப் பாம்பாக அரசியல் கட்சியினரை கண்காணித்து வருகின்றனர். இதனால் அரசியல் கட்சிகளால் பணப்பட்டுவாடா போன்ற தேர்தல் முறைகேடுகளில் ஈடுபட முடியவில்லை. இந்த நிலையில் தேர்தல் பறக்கும் படையினரின் நடமாட்டத்தை கண்டுபிடித்து அதற்கு ஏற்ப தேர்தல் முறைகேடுகளில் ஈடுபட திருச்சியில் குறிப்பிட்ட ஒரு அரசியல் கட்சியின் முக்கிய நிர்வாகி அதிரடியாக ஒரு திட்டம் தீட்டியுள்ளார். அதன்படி, திருச்சியில் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் அங்கு பணியாற்றும் போலீஸ் அதிகாரிகளின் பதவிக்கு ஏற்ப கணிசமான தொகையை கவர்களில் போட்டு அந்த அரசியல்வாதி அனுப்பி வைத்துள்ளார்.
உதாரணத்திற்கு காவல் நிலையத்தில் பணியாற்றுபவர் காவல் ஆய்வாளர் ரேஞ்ச் என்றால் அவருக்கு 50 ஆயிரம் ரூபாய். உதவி ஆய்வாளர் என்றால் 30 ஆயிரம் ரூபாய். இப்படி கீழ் நிலை காவலர் வரை ரேட் பிக்ஸ் செய்து அவர்களின் பெயர்களை கவரில் எழுதி காவல் நிலையத்திற்கே அந்த அரசியல்வாதி கொடுத்து அனுப்பியுள்ளார். இந்த தகவல் திருச்சி காவல் ஆணையர் லோகநாதனை எட்டியுள்ளது. இதனை அடுத்து உதவி ஆணையர்கள், துணை ஆணையர்களை இது குறித்து விசாரிக்குமாறு காவல் ஆணையர் லோகநாதன் உத்தரவிட்டார்.
களம் இறங்கிய காவல் படை நடத்திய ஆய்வில்திருச்சி தில்லை நகர் காவல் நிலையத்தில் 12 கவர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அந்த கவர்களில் 24ஆயிரம் ரூபாய் இருந்தது. இதே போல் திருச்சி ஜிஎச் காவல் நிலையத்தில் 20 கவர்களில் 40ஆயிரம் ரூபாய் பிடிபட்டது. இதன் மூலம் திருச்சியில் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் லஞ்சப்பணம் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது குறிப்பிட்ட அந்த அரசியல்வாதிக்கு தேர்தல் பறக்கும் படையினர் செல்லும் இடம் குறித்த தகவல்களை தெரிவிக்க இந்த கவர்கள் காவல் நிலையத்திற்கு கொடுத்து அனுப்பப்பட்டது தெரியவந்தது.
இதனை அடுத்து திருச்சியில் ஒரு ஆய்வாளர், உதவி ஆய்வாளர், ஒரு தலைமைக் காவலர் உள்ளிட்ட 6 பேர் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளனர். அத்தோடு விசாரணையும் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு நேற்று இரவு முதல் அவர்கள் விசாரணையை தொடங்கியுள்ளனர். இதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் அறிக்கை கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்தியாவிலேயே தேர்தல் காலத்தில் பறக்கும் படையினரின் நடமாட்டத்தை அறிந்து கொள்ள போலீசாருக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டது தமிழகத்தில் தான் முதல் முறை நடைபெற்றுள்ளது என்கிறார்கள்.
இதனால் இந்த விவகாரத்தை தேர்தல் ஆணையம் மிகத் தீவிரமான பிரச்சனையாக எடுத்துக் கொண்டு அறிக்கை கேட்டுள்ளது. மேலும் காவல் நிலையங்களுக்கு கவரை அனுப்பி வைத்த அரசியல்வாதி யார் என்கிற விசாரணையும் தீவிரமாகியுள்ளது. இதன் முடிவு கிடைத்த பிறகு தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கை அனுப்பி வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே திருச்சி காவல் நிலையங்களுக்கு கவர்களில் லஞ்சம் கொடுத்து அனுப்பப்பட்ட விவகாரத்தில் ஆதாரம் இல்லாமல் கே.என்.நேரு பெயர்இழுக்கப்படுவதாக திமுக தலைமை தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.