தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் வருகிற 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 9ம் தேதி தொடங்கி 16ம் தேதி நிறைவடைந்தது. தகுதி பெற்ற வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு இருந்தனர். கடந்த ஒரு வார காலமாக அனல் பறக்கும் பிரச்சாரம் நடந்து வந்த நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை மறுநாள் நடக்க இருக்கிறது. அதற்கான பிரச்சாரம் இன்று மாலை 5 மணியுடன் பிரசாரம் நிறைவடைந்தது.

பிரச்சாரம் நிறைவடைந்த பிறகு வாக்காளர்களை தவிர பிரச்சாரத்திற்காக வெளியூர்களிலிருந்து வந்திருப்பவர்கள் அந்த பகுதிகளில் இருந்து வெளியேற தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு இருக்கிறது. மீறுபவர்கள் மீது தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

கிராமபுற உள்ளாட்சித் தேர்தலில் பழையபடி வாக்குச்சீட்டு முறையே பின்பற்றப்படுகிறது. இதற்காக ஓட்டுச்சீட்டு அச்சடிக்கும் பணிகள் கடந்த சில நாட்களாக நடந்து வந்தது. அது தற்போது நிறைவடைந்து வாக்குச்சாவடிகளுக்கு அனுப்புவதற்கான பணிகள் நடந்து வருகின்றது. 27ம் தேதி காலை 8 மணியிலிருந்து மாலை 5 மணி வரை தேர்தல் நடக்கிறது. உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் 27 மாவட்டங்களுக்கும் இரண்டு நாட்களிலும் பொது விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது. பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டுள்ளன.