திருமணமான 21 நாட்களில்  விபத்தில் உயிரிழந்த கணவரின் உடலை பார்த்து மனைவி கதறி அழுத சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  

திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்த புள்ளம்பாடி தெற்கு தெருவை சேர்ந்தவர் ரஞ்சித்குமார்(28). இவர் மணிகண்டம் காவல் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். இவருக்கு 20 நாட்களுக்கு முன்புதான் திரும் நடைபெற்றது. விடுமுறையில்  இருந்த ரஞ்சித்குமார் நேற்று மீண்டும் வேலைக்கு சென்றார். 

மாலை பணி முடிந்து இருசக்கர வாகனத்தில் விடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது, திருச்சி லால்குடி அருகே உள்ள அகிலாண்டபுரம் என்ற பகுதியில் வந்தபோது பின்னால் வந்த லோடு ஆட்டோ இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில், தூக்கி வீசப்பட்ட ரஞ்சித்குமார் சாலையோரத்தில் இருந்த இரும்பு கம்பத்தின் மிது மோதி விழுந்தார். இதில், தலையில் படுகாயமடைந்து மயங்கினார். 

உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி ரஞ்சித்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ரஞ்சித்குமார் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து ஏற்படுத்திய ஓட்டுநரை போலீசார் கைது செய்துள்ளனர். திருமணமான 21 நாட்களில் கணவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.