திருச்சி அருகே இருக்கும் மணப்பாறையில் இரண்டு வயது குழந்தை சுர்ஜித் ஆழ்துளைக்கிணற்றில் தவறி விழுந்த சம்பவம் தமிழகம் முழுவதும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. வெள்ளிக்கிழமை மாலை 5.40 மணியளவில் விழுந்த குழந்தையை இன்னும் மீட்க முடியாமல் மீட்பு படையினர் போராடி வருகின்றனர்.

முதலில் 30 அடி ஆழத்தில் இருந்த குழந்தை  70 , 80 அடி வரையில் சென்று தற்போது 87 அடியில் சிக்கியிருக்கிறது. தேசிய மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வந்தன. பலகட்ட முயற்சிகளும் தோல்வியடைந்த நிலையில் ஆழ்துறை கிணறு அருகே  மற்றொரு குழி தோண்டி, தீயணைப்பு வீரர்கள் மூன்று பேர் அதனுள்ளே சென்று குழந்தை சுர்ஜித்தை மீட்டு வர முடிவு செய்யப்பட்டது. இதற்காக ஓஎன்ஜிசியின் ரிக் இயந்திரம் வரவழைக்கப்பட்டு, ஆழ்துளை கிணறுக்கு அருகில் 3 மீட்டர் தொலைவில் 1 மீட்டர் அகலம், 90 அடி ஆழத்தில் ரிக் இயந்திரம் மூலமாக குழி தோண்டப்பட்டு வந்தது. 

குழி தோண்டப்படும் பகுதியில் அதிகமான பாறைகள் இருப்பதால் பெரிய அளவில் இடையூறுகள் ஏற்பட்டுள்ளன. முதலில் கொண்டுவரப்பட்ட ரிக் இயந்திரம் பழுதானத்தை தொடர்ந்து அதி நவீன வசதிகளுடன் மீண்டும் ஒரு இயந்திரம் கொண்டுவரப்பட்டது. இது மும்மடங்கு வசதிகள் கொண்டது என அதிகாரிகள் தெரிவித்திருந்தனர் . இதனால் குழந்தை விரைவில் மீட்கப்படுவான் என்று அனைவரும் நம்பிக்கையோடு காத்திருந்தனர். இந்த நிலையில் கடினமான பாறைகளால் அதனுடைய நுனி பகுதிகளும் சேதாரமாகி மீட்பு பணியில் மேலும் தாமதம் ஏற்பட்டுள்ளது. எனினும் அது சரி செய்யப்பட்டு மீட்பணிகள் தொடர்ந்து தொய்வின்றி நடந்து வருகிறது.

இதுதொடர்பாக அமைச்சர் விஜய பாஸ்கர் கூறும் போது,  "சுமார் 40 அடி வரை குழி தோண்டப்பட்டுள்ளது. அதிநவீன இயந்திரங்களுக்கு சவால் விடும் வகையில் பாறைகள் கடினமாக இருக்கின்றன. இருந்தாலும் மீட்புக்குழுவினர் மிகுந்த எச்சரிக்கையுடன் திறம்பட பணியாற்றி வருகின்றனர். திட்டமிட்டபடி பணிகள் நடந்திருந்தால் மீட்பு பணிகள் இந்நேரம் முடிந்திருக்கும். கடினமான பாறைகளை உடைக்க முடியாமல் இயந்திரம் திணறுகிறது. மாற்று வழிகள் குறித்து வல்லுநர் குழுக்களுடன் ஆலோசித்து வருகின்றோம். இறுதி முடிவு எடுக்கவேண்டிய தருணத்தில் இருக்கிறோம்".

இவ்வாறு அமைச்சர் விஜய பாஸ்கர் கூறினார்.