20 ஆண்டுகளுக்கு பிறகு வரும் புண்ணிய நாள் இன்று..! சந்ததி தழைக்க செய்ய வேண்டிய புனித காரியம் என்ன தெரியுமா..?
இன்று மகாளய அமாவாசை தினத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருக்கும் புண்ணிய ஆறுகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர்.
வருடத்தில் தை அமாவாசை மற்றும் ஆடி அமாவாசை போன்ற நாட்களில் பொதுமக்கள் புனித ஆறுகளின் கரைகளில் தங்களது முன்னோர்களை நினைத்து அவர்களுக்கு பூஜை செய்து திதி கொடுப்பது வழக்கம். இதன் மூலம் மூத்தோர்களின் ஆத்மா சாந்தி அடைந்து தமது சந்ததியினரை அவர்கள் மேலும் தழைக்க செய்வார்கள் என்பது நம்பிக்கை.
தை, ஆடி மாதங்களில் வரும் அமாவாசை போன்றே புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசை தினத்திலும் முன்னோர்களுக்கு திதி கொடுத்தால் மிகவும் சிறப்பு என பக்தர்களால் கூறப்படுகிறது. அதிலும் இந்த வருடம் 20 வருடங்களுக்கு பிறகு புரட்டாசி சனிக்கிழமையில் மகாளய அமாவாசை வருவதால் இந்த நாள் மேலும் சிறப்பானது என்று ஆன்மீக பெரியவர்கள் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இருக்கும் நீர்நிலைகளில் பக்தர்கள் பெருமளவில் திரண்டு வழிபாடு நடத்தி வருகின்றனர்.
திருச்சி ஸ்ரீரங்கம் காவிரி ஆற்றங்கரையில் ஆயிரக்கணக்கான மக்கள் காலை முதலே திரண்டு ஆற்றங்கரைகளில் அமர்ந்து தங்கள் முன்னோர்களை நினைத்து திதி கொடுத்து வருகின்றனர்.
சென்னை மயிலாப்பூரில் இருக்கும் கபாலீஸ்வரர் கோவில் குளத்திலும் பொதுமக்கள் தங்கள் முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் செய்து வருகின்றனர் இங்கே கூட்டம் அதிகளவில் இருக்கும் நிலையில் முறையான பாதுகாப்பை காவல்துறையினர் வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. இதன்காரணமாக பொதுமக்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு சிரமம் நிலவி வருகிறது.
தென்னகத்து காசி என்று அழைக்கப்படும் ராமேஸ்வரத்தில் ரயில், பேருந்துகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து இன்று அதிகாலை முதல் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்கின்றனர்.
தாமிரபரணி நதி ஓடும் மாவட்டங்களான திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடியில் ஆறு, குளம் மற்றும் நீர் நிலைகளில் ஏராளமான பக்தர்கள் தங்கள் முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர். பாபநாசத்தில் இருக்கும் பாபநாச சுவாமி கோவில் படித்துறையில் காலை முதல் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு முன்னோர்களை நினைத்து வழிபட்டு வருகின்றனர். அதேபோல திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மகாளய அமாவாசையை முன்னிட்டு கடற்கரையில் திரளான பக்தர்கள் புனித நீராடி தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்கின்றனர்.
இதேபோன்று தமிழகத்தின் பல இடங்களிலும் நீர் நிலைகளில் முன்னோர்களுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகிறது.