நீதிமன்றத்திற்கு சாட்சி சொல்ல சென்ற நபர் காட்டெருமை முட்டி பலி
திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியைச் சேர்ந்த சிவஞானம் என்பவர் இன்று காலை புதுக்கோட்டை நீதிமன்றத்திற்கு சாட்சி சொல்வதற்காக தனது இருசக்கர வாகனத்தில் சென்ற போது காட்டெருமை முட்டி பரிதாபமாக உயரிழந்தார்.
திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியை அடுத்த தெத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சிவஞானம். விவசாயம் செய்து வருகிறார். புதுக்கோட்டை நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு ஒன்றில் சாட்சி சொல்வதற்காக இவர் இன்று காலை தனது இருசக்கர வாகனத்தில் புதுக்கோட்டை நோக்கி சென்று கொண்டிருந்தார். தெத்தூர் மருதம்பட்டி சாலையில் தெத்தூர் நர்சரி கார்டன் அருகே சென்றுகொண்டிருந்தார்.
அப்போது சுமார் 7 காட்டெருமைகள் சாலையில் மேய்ந்துகொண்டிருந்தன. இதனை பார்த்த சிவஞானம் தனது இருசக்கர வாகனத்தை ஓரமாக நிறுத்த முயற்சி செய்துள்ளார். அதற்குள் கூட்டத்தில் இருந்த ஒரு காட்டெருமை வேகமாக வந்து சிவஞானத்தின் மார்பு பகுதியில் பலமாக குத்தி தள்ளியது. இதில் நிலைகுலைந்த அவர் அருகில் இருந்த மின் கம்பத்தில் மோதி கீழே விழுந்தார்.
இதனை பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக அவரை மீட்டு துவரங்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர் உடனடியாக மருத்துவமனைக்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் துவரங்குறிச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏராளமான காட்டெருமைகள் வசித்து வருகின்றன. வனப்பகுதியில் போதிய நீர், உணவு கிடைக்காத காரணத்தால் காட்டெருமைகள் ஊருக்குள் வசித்து வருவதாக குற்றம் சாட்டும் பொதுமக்கள், இது தொடர்பாக அரசு அதிகாரிகள் உடனடியாக நடடிவக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.