திருவாரூரைச் சேர்ந்தவர் மிஷ்கின். 1928 ம் ஆண்டு திருவாரூர் மாவட்டத்தில் இருக்கும் கூத்தாநல்லூரில் பிறந்த இவருக்கு தற்போது வயது 91. பள்ளிப்படிப்பிற்கு பிறகு சென்னை லயோலா கல்லூரியில் பட்டபடிப்பாக பி.காம் பயின்றிருக்கிறார். பிறகு சி.ஏ படிப்பை 1958 ம் ஆண்டு முடித்த இவர் ஆடிட்டராக பணியாற்றி வந்திருக்கிறார்.

பணிக்காலம் முடிந்து ஓய்வில் இருந்திருக்க வேண்டிய மிஷ்கின், தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொண்டு படிப்பை தொடர திட்டமிட்டார். வங்கி காசோலை திரும்ப பெறுதல், அது சம்பந்தமான மோசடிகள் குறித்து ஆய்வுகள் மேற்கொண்ட அவர், அதுதொடர்பான புகார் மற்றும் பிரச்சனைகள் குறித்த 400 வழக்குகளை கையிலெடுத்து ஆய்வு செய்தார். தள்ளாத வயதிலும் அதை வெற்றிகரமாக முடித்திருந்தார்.

இந்த நிலையில் அவருக்கு திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் முனைவர் பட்டம் வழங்கி சிறப்பித்திருக்கிறது. இதற்காக நடந்த பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநரும் பல்கலைக்கழக வேந்தருமான பன்வரிலால் ப்ரோஹித் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். 

அப்போது 91 வயதிலும் தொடர்ந்து படித்து ஆய்வுகள் மேற்கொண்ட மிஷ்கின், முதலாவது நபராக அழைக்கப்பட்டு முனைவர் பட்டத்தை ஆளுநர் வழங்கினார். அவரின் இந்த வெற்றிகரமான முயற்சி தற்போதைய இளையதலைமுறையினருக்கு ஊக்கப்படுத்தும் விதமாக அமைந்திருப்பதாக மாணவர்கள் தெரிவித்தனர்.