மீட்பு பணிகள் எக்காரணம் கொண்டும் கைவிடப்படாது என்றும் அவர் தெரிவித்தார். ஆழ்துளைக் கிணற்றில் சிக்கியுள்ள குழந்தையை மீட்கும் பணி 69 மணி நேரத்தை கடந்து தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பலகட்ட முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில் ரிக் இயந்திரம் மூலம் குழி தோண்டப்பட்டு வருகிறது. குழி தோண்டும் போது பாறைகள் இருந்ததால் அப்பணியில் தொய்வு ஏற்பட்டது.

இதையடுத்து அதிகத் திறன் கொண்ட இரண்டாவது இயந்திரம் ராமநாதபுரத்திலிருந்து கொண்டு வரப்பட்டது. நேற்று காலை முதலே இயந்திரங்கள் செயல்பட்டாலும் பாறைகள் குறுக்கீடு, மழை போன்ற காரணங்களால் தோண்டும் பணி காலதாமதமாகி வருகிறது. 

கடினமான பாறைகள் இருப்பதால் குழி தோண்டும் பணியில் தொய்வு ஏற்பட்டது. 45 அடி வரை குழி தோண்டப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து குழி தோண்டப்படும் என வருவாய் ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதற்கிடையே ரிக் இயந்திரத்தால் பாறைகளை உடைக்க முடியாததால் போர்வெல் மூலம் பாறைகளைத் துளையிட்டு குழியை தோண்ட முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து போர்வெல் மூலம் துளையிடும் பணி தொடங்கியுள்ளது. 

அதன்படி குறிப்பிட்ட ஒரு மீட்டர் அகலத்துக்குள் போர்வெல் மூலம் 3 துளைகளிட முடிவு செய்யப்பட்டுள்ளது. துளைகள் இடப்பட்டால் பாறைகள் நொறுக்கப்படும். பின் ரிக் இயந்திரத்தின் மூலம் எளிதாக குழி தோண்ட முடியும் என திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. மேற்கொண்டு பாறைகளை போர்வெல் துளையிட்டு வருகிறது. குவார்ட்ஸ் வகை பாறைகளால் குழி தோண்டுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.