உலகம் முழுவதும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இதுவரையிலும் 342 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்து வருகின்றனர். இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரபடுத்துமாறு மாநில அரசுகளை மத்திய அரசு எச்சரித்திள்ளது. தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு தற்போது அதிகரிக்க தொடங்கியிருக்கிறது. 

நேற்று ஒரே நாளில் வெளிநாடுகளில் இருந்து வந்த 3 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டு சிகிச்சைக்கு கொண்டுசெல்லப்பட்டு நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்தது. இந்தநிலையில் இன்று மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. ஸ்பெயின் நாட்டில் இருந்து தமிழகத்திற்கு சுற்றுலா வந்திருந்த பயணி ஒருவருக்கு தொடர் இருமல், காய்ச்சல் இருந்ததால் பரிசோதனையில் இருந்தார். அவருக்கு தற்போது கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகி இருப்பதாக அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார். இதன்மூலம் தமிழகத்தில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.

 

இதனிடையே இன்று நாடு முழுவதும் சுய ஊரடங்கு கடைபிடிக்கபட்டு வருகிறது. காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை பொதுமக்கள் யாரும் தேவையின்றி வெளியில் செல்ல வேண்டாம் எனவும் கூறப்பட்டிருக்கிறது. கடைகள், உணவகங்கள், பொதுப்போக்குவரத்துகள் அனைத்தும் தடை செய்யப்பட்டிருக்கும் நிலையில் இன்று நடைபெற இருந்த முக்கிய நிகழ்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.