திருச்சியில் ஜவுளிக்கடை ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், அங்கு பணியாற்றியவர்கள் உட்பட ஊழியர்கள் 533 பேரை தனிமைப்படுத்த அம்மாவட்ட ஆட்சியர் சிவராசு உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. உச்சகட்டமாக உயர்ந்து வரும் கொரோனா ஒரு பக்கம் இருந்தாலும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருகிறது. இந்நிலையில் திருச்சியில் பிரபல ஜவுளிக்கடை ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து ஊழியர்கள் 533 பேரை தனிமைப்படுத்த ஆட்சியர் சிவராசு உத்தரவிட்டுள்ளார்.

ஜவுளிக்கடை ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் ஜவுளிக்கடை கடையை 15 நாட்கள் மூடவும் ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.  அப்பகுதியில் கிருமிநாசினி தெளிக்கும் பணியில் சுகாதாரத்துறை பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், பணியாளர்கள் மட்டுமின்றி அந்தக் கடைக்கு வந்த வாடிக்கையாளர்களுக்கும் பரவி இருக்கலாம் என்கிற அச்சமும் எழுந்துள்ளது. அந்த கடைக்கு வந்த பல வாடிக்கையாளர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.