ஆழ்துளை கிணற்றில் விழுந்து கடந்த நான்கு நாட்களாக உயிர்ப் போராட்டம் நடத்திவந்த குழந்தை சுர்ஜித் 80 மணி நேர மீட்பு பணிக்குப் பிறகு சடலமாக மீட்கப்பட்டன்.
மணப்பாறையை அருகே நடுக்காட்டுப்பட்டியில் குழந்தை சுர்ஜித், வீட்டு அருகே இருந்த ஆழ்துளை கிணற்றில் கடந்த 25 அன்று மாலை 5.40 மணிக்கு விழுந்தான். அவனை மீட்பதற்காக அரசு இயந்திரங்கள் தீவிரமாக முயன்றன. ஆனால், மீட்புபணியில் பல பின்னடைவுகள் ஏற்பட்டன. குழந்தை நலமாக மீட்கப்பட வேண்டும் என தமிழ் நாடே பிரார்த்தனையில் ஈடுபட்டது.  நாட்கள் தொடர்ந்து கடந்த நிலையிலும்கூட  நம்பிக்கை இழக்காமல் மீட்புப் பணிகள் தொடர்ந்தன. 82 மணி நேரம் நடந்த மீட்புபணிகள்  தொடர்ந்த நிலையில் அதிகாலை 2.30 மணி அளவில் மாநில வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
 “ஆழ்துளை கிணற்றில் விழுந்த சுஜித்தை மீட்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டது. ஆழ்துளை கிணற்றிலிருந்து இரவு 10.30 மணி அளவில் அழுகிய வாடை வந்தது. குழந்தையின் கை சிதைந்துள்ளது. குழந்தை உயிரிழந்ததை மருத்துவக் குழுவினரும் உறுதி செய்துள்ளனர். குழந்தையின் உடலை மீட்க, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்று ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். 
குழந்தை உயிரிழந்தது தெரிய வந்ததை அடுத்து, உடலை மீட்பதற்கான பணிகள் நடைபெற்றன. அதிகாலை 4.30 மணி அளவில் தேசிய மீட்பு படையினரும் மாநில மீட்பு படையினரும் அழகிய நிலையில் இருந்த குழந்தையின் சடலத்தை வெளியே கொண்டு வந்தனர். பல்வேறு முயற்சிகள் தோல்வியில் முடிந்தாலும், கடினமான பாறைகளை உடைக்க தாமதமான நிலையிலும் மீட்புப் பணிகள் பலன் அளிக்காமல் போனது. 82 மணி நேர மீட்புப்பணி பலனளிக்காமல், குழந்தை சுஜித் உயிரிழந்தான். இதனால் நடுக்காட்டுப்பட்டி மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழகமும் சோகத்தில் மூழ்கியுள்ளது.